May 13, 2007

உறுப்பு மழை



...


என்னை இரண்டாக பிளக்கும் முயற்சியில் தோற்றுப்போய்
அலறும்
உன் ஒழுங்கின்
உறுப்புகளில்
வழிகிறது குருதி

எங்கள்
திசைகளைத்தின்று
சூரியனாய் பெருத்து.
வெளிச்சம் பூசி
வெளியேறுபவனே

உன்னை

தொழும் பொழுதெல்லாம்
தொன்மம் வெடிக்கிறது

கட்டை விரல்களின்
காயத்திலிருந்து
பீய்ச்சியடிக்கிறது
நூற்றாண்டுகளின் நாற்றம்

இளநீருக்குள்ளிருந்த
இரத்தம் வடியத்தொடங்கிவிடுகிறது
பறத்தலைஎம்மிடம்
படித்தாய்
இப்போது
என்வானத்தையளக்கவும்
என்வனத்திலிறங்கவும்
உனது
கடவுச்சீட்டுக்கு
காத்திருக்கிறேன்

சிறகுகளிருக்கிற உணர்வற்றுப்போய்
எம்
வார்த்தைகளை
வரம்பில் கொன்று
மூடமே.. அறிவென்று
மூளையை பழக்கி
உதடுகள் தைத்து
ஊமையாய் மாற்றி
-நீ....
சங்கீதங்களுக்கு
சக்கரவர்தியானாய்

இன்றுவரை
எங்கள்
வடுக்களில்தானேஉன்
வரலாறு முட்டையிடுகிறது

கடிகாரமே தெரியாத என்னையும்
கடிகாரமே பிடிக்காதவர்களையும்
எதிரெதிர் திசைகளில்...
நுட்பமாய் பிரித்தபடி
'நூல்'. போகிறது கொடிய நாகம் போல..

இனி
விழிகளையுரித்த

அம்புகளையொடித்து
அதிகாரத்தை குழைத்து
செவிகளிளடைத்த
செம்புத்தகடுகளில்

உயிர்களை எழுதப்போகிறோம்
அதோ....
முப்பாட்டன்எழும்புகள் கொண்டு
உன்
ஒளி வட்டங்களை
உருட்டி விளையாடத்தொடங்கிவிட்டது
எமது பொடிசுகள்

நந்தனின்சாம்பல் மேட்டிலிருந்து....
எரி குரல்..புயலாயெழுகிறது

எங்கிருந்தோ
மாறு கைகள்.கால்கள்
உக்கிரமாகிறது
உறுப்பு மழை....

No comments:

Post a Comment

Footer