August 23, 2009

கெளடில்யரும், ஒரு டாஸ்மாஸ் பாரும்


மணி மாலை 8.30 லிருந்து 9.00 க்குள் இருந்திருக்கும்

வேலாண்டி பாளையம் சங்கமம் அலுவலகம்..

நுழைந்ததும் ஒரே களேபரம்..

கொஞ்சமாய் பீரடியுங்கள் ...

இல்லை.., எனக்கு மூடில்லை

என்ன பெரிய்ய்ய்ய மூடு?

மூடீட்டு டம்ளர எடு...ஊத்து...அடி...அம்புட்டுதான்

என்னோட பிறந்த நாளை கேவலப்படுத்துறயா நீ ?

சம்பத்தின் வார்த்தையை தட்டமுடியவில்லை

நான் குடிக்காத ஆள் கிடையாது அதை ஒரு ஒழுக்கம் சார்ந்த விசயமாக பார்ப்பதுமில்லை ஆனால் வெட்டியாய் அடித்துவிட்டு அன்பழகனை(அன்பழகனுக்கு நிச்சயம் ஒரு பதிவு வரும்) போல மொக்கை போடுவது அறவேபிடிப்பதில்லை

அதற்கு நான் என்ன செய்ய முடியும்

அளவாய்தான் அடிப்பேன்

இதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை, என்னால் முடிவதில்லை

எங்கள் அறையின் குடிகாரர்கள் பட்டியலில் எனக்கு இடம் கிடையாது

நானும் குடிகாரன் என்றால் ‘வடிவேல் நானும் ரவுடிதான்னு சொல்லுவாரே அது மாதிரியா’ என்று சிரிக்கிறார்கள்


அப்புறம் ஒரு டம்ளர் மட்டும் அடித்து காலாய்க்க ஆரம்பித்தோம்

சாராயத்தின் வரலாறு குறித்து வில்வம் கேள்வி எழுப்பினார்

தமிழன் குடிக்க ஆரம்பித்த பிறகுதான் ..........
எப்ப குடிக்க ஆரம்பித்தார்கள்?
பழந்தமிழகத்தில் மதுவே கிடையாது...........

யார் சொன்னது?

விறலி விடு தூது சாரயம் பற்றி பேசுகிறது

ஒளவையாருக்கும் இப்பழக்கம் இருந்திருக்கிறது

அப்படி இல்லையென்றால் ஆத்திச்சூடியும் கிடையாது கொன்றைவேந்தனும் கிடையாது

அந்தக்கட்டத்தில் அப்படி இல்லையென்றால்தான் அதிசியம் அது சமூக நடவடிக்கை

பதிற்றுப்பத்தில் கள் பற்றிய ஒரு பாட்டிருக்கிறது தோழர்

அப்படியா?அப்படின்னா அது ‘பாட்டில் பத்து’ முதல் மொக்கையை சின்னையன் இறக்கினார்

அவ்வையாரும் அதியனனும் சியர்ஸ் சொல்லி கள்ளடித்ததை புறநானூறு சொல்லுது

கொக்கமக்கா - இது முருகன்

கொஞ்சம் கலாசிவிட்டு வண்டியைகிளப்பினேன்
அப்போது மணி இரவு 10.30
லாலிசாலையின் முக்கு திரும்பியதும் பகீரென்றது..
கொஞ்சமாய் இருந்த பீரின் போதை கால்கள் வழியாக தரையிறங்கியது
விவசாயக்கலூரியின் பாதையை எச்சரிக்கையோடுபார்த்தேன்

“Drunk and drive” போலீசார் இல்லை

அப்பாடா!

இறங்கிய போதைமுள் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டது

சிலுசிலுக்கும் காற்று

யார்முகமும் தெரியாத இரவு

கொஞ்சம் கிறக்கம்
இருட்டின் புழுக்கைகளாக மனிதர்கள்

இதைவிட வேறென்ன வேண்டும்

லேசாக மிதந்தேன்

புதூர் போனதும் இறங்கி ஒரு தம்மடித்தேன்

’கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்ததலும் இருக்கும், பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும்’ உறுதியெடுத்துக்கொண்டேன்

வண்டியை எடுக்கும்போது ஒரு பையன்....

சார் பஸ் டைம் முடிந்து போச்சு நான் வடவள்ளிவரைக்கும் போகவேண்டும்

வரட்டுங்களா?

நானா சுமக்கிறேன், வா!

வண்டியில் இடம்கொடுத்தேன்

வழியில்......

ஆமா என்ன வய்சாச்சு உனக்கு?

18 .....

எங்க போய்ட்டு வரே ?

வேலைக்கு..

ஆமா இப்ப எங்க போறே?

அதன் சொன்னனே சார் வடவள்ளிக்கு
ஓ?
ஏம் படிக்கலயா?

இல்லசார்

ஏன்?

கஸ்டம்

என்ன கஸ்டம்

இப்போது வண்டி கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வந்துவிட்டது

போலீஸ் வண்டியை நிறுத்தியது

நிறைய பேரை சோதனை செய்து சிலரை தனியாக நிறுத்தி
வைத்திருந்தார்கள்

லைசென்ஸ்,இன்ஸுரன்ஸ், இத்தியாதி கருமங்களை டூல் பாக்ஸை திறந்து
எடுத்து கான்ஸ்டபிளிடம் நீட்டினேன்


இத யாரு கேட்டா?

பின்னே!

குடிச்சிருக்கியா?... எங்கே வாய ஊது

‘அய்யோ... மோசம்போயிட்டியேடா’ உள் மனசு புலம்பியது

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை நானென்ன ஒரு மொடாவா குடிச்சேன்

வேறொரு கன்ஸ்டபிள் ஊதச்சொன்னார்

அவர் ஜெகஜால கில்லாடி,... கண்டுபிடித்துவிட்டார்

ஓரமா நில்லுப்பா! சாவியை எடுத்துக்கொண்டார்

சரி தம்பி நீங்க கிளம்புங்க.... அந்த பொடியனிடம் சொன்னபோது

சார் என்னாலதான் உங்களுக்கு இந்த நிலமையாச்சு மன்னிச்சுருங்க சார்

அவன் போகவே இல்லை கொஞ்சநேரம் அங்கேயே நின்றிருந்தான்

கிளம்புப்பா நான் பார்த்துக்கறேன், மெல்ல நடக்க ஆரம்பித்தான்

அப்புறம் ஒரு போலீஸ் தேவதை வந்தது....அது ஒரே கலாய்ப்பு மூடில் இருந்தது

மேடம் இவன் குடிச்சிருக்கான்

என்ன குடிச்சிருக்கியா?

ஆமாம் கொஞ்சமாய் !

என்ன குடிச்சே?

பீர்......

எவ்வளவு ?

ஒரு டம்ளர்......

அது புண்முறுவல் பூத்தது

ஏட்டு இவனக்கொண்டுபோய் புக் பண்ணுங்க...

இல்லை, ஸ்பாட் பைன்தானே சொல்லுங்க இங்கயே கட்டிடறேன்

இது சிட்டிலிமிட் இல்லை

ஓ!

ஏட்டு வண்டியஓட்ட நான் உட்கார்ந்துகொண்டேன்

இத்தன செக் பன்னறாங்கன்னு தெரியுமில்ல எதுக்கு குடிக்கறே?

சங்கம சமாச்சாரங்களையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்

சார் ஸ்டேசன் போகம இருக்க வழியிருக்கா?

ஏன்?

‘அங்க போனா பிரச்சனியாயிடும்’

நான் பாத்துக்கறேன்

இல்லை எங்க சொந்தக்காரங்க அங்க வருவாங்க!

யாரு?
........................
அப்படிய்யா அவுங்களாஅவுங்க உனக்கு என்னாகனும் ?
............................................
வண்டியின் வேகம் தன்னிச்சையாக குறைந்தது

ஆமா என்ன வேல செய்யுற தம்பி?

குரலில் கொஞ்சம் கடுமை குறைந்திருந்தது

சமூகப்பணி

அப்படீன்னா?

அது ஒரு வேலங்க

ஓ!

அவருக்கு விளங்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது அதை உறுதிப்படுத்தும் விதமாக

என்ன படிச்சிருக்கே?

வக்கிலுக்கு!

வண்டியை நிறுத்திவிட்டார் திரும்பி

ஏன் சார் இத அப்பவே சொல்லுலாமில்ல?

மரியாதை லிட்டர் கணக்கில் எகிறியது

ஆனா கோர்ட்டுக்கு போவதில்லை

அப்புறம் சார்....

ஒரு அரசின் திட்டத்தில் பணியாற்றுகிறேன்

என்ன சார்? நீங்க இதெல்லாம் சொல்லாம இப்படி இருகீங்களே

கடய 10 மணிக்கு மூடுன்னா எங்களுக்கும் தொல்லை கம்மியாகும் அத செய்யுதாஇந்த கவுறுமெண்டு- இது ஏட்டு

அதற்குள் தேவதை வந்துவிட்டது

என்ன ஏட்டையா நின்னுட்டீங்க?
.........................................................................................................!
எல்லா சமாச்சாரத்தையும் தேவதையிடம் சொல்லியிருப்பார் போல!

, எங்க டூட்டிய நாங்க பாக்கனுமில்ல சார்
இல்லை பைன் வேணா கட்டிடறேன்
இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குங்க.....
வண்டிய ஏட்டு பவ்யமாய் ஸ்டார்ட் செய்து ஒப்படைத்தார்

ஏட்டு எவ்வளவு கேஸாச்சு

இவுரில்லாம 2 ங்க

இன்னொன்னு புடிங்க!!!!

அவர்களுடைய டார்கெட் அன்றைக்கு மூன்றென்று புரிந்துகொண்டேன்

வடவள்ளியில் வந்து ஒரு தம் பத்தவைத்துவிட்டு யோசிச்சேன்

இப்படியாயிருச்சே!

எங்கே கோளாறு?


ச்சே!!!!!
இந்த இவுனுககிட்டல்லா நிக்கவேண்டியதா போச்சே

கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்தாலும் இருக்கும்,...பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேனே... என்னாயிற்று அது?

அப்போதுதான் உறைத்தது

அந்த பையனோடு பேசிக்கொண்டே வந்ததில் பைமெட்டல் கட்டும்,
சங்கமத்தில் பீரடித்ததும் மறந்து போயிருக்கிறேன்

ஆம் இந்த அரசாங்கம் எதற்க்கு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது?

கல்லா கட்ட!

அப்புறம் எதுக்கு பிடிக்கிறார்கள் ?

குடித்துவிட்டு வண்டியோட்டி ஆகும் விபத்துகளை தவிர்க்க........

இந்த ரோட்டில் குடித்துவிட்டு வண்டியோட்டி நடந்த விபத்தின் சதவீதம் ஜீரோ பர்செண்ட்!

அரசு தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவேண்டாமா?...

அப்புறம் கடையை திறப்பது எந்த ஒழுக்கத்தில்?

கல்லா கட்ட!

அப்புறம் ஏன் பிடிக்கிறார்கள்?

ஒழுக்க மயிர நிரூபிக்க ....

தொடர்ந்து தினமும் புடிக்கவேண்டியதுதானே!.. என்ன மயிறுக்கு சனிக்கிழமை மட்டும் பிடிக்கிறாங்க?

அன்னிக்குதான் நிறைய கேஸ்கிடைக்கும்

தினமும் பிடிச்சா யாரும் குடிக்கமாட்டாங்கதானே

குடிக்காட்டீ டாஸ்மாஸ்க் எப்படி ஓடும்?

விக்கறது கொறஞ்ச தகவல் வந்திருக்கு...!

லபக்க்றத நிறுத்து!

அப்புறம்கேப்பு
அரசாங்கத்துமேல குடிக்காத மக்களுக்கு கொஞ்சம் அதிருப்தி -உளவு
மீண்டும் லபக்கு...
இப்படி குடிகாரர்களின் ஆதரவையும் குடிக்காதவர்களின் ஆதரவையும்
பேலன்சாய் வைத்திருப்பது எம்புட்டு கஸ்டம் தெரியுமா?

கருப்பு கார்பரேட்டுகளுக்கு இது கைவந்த கலை

கல்லா கட்டுறது மட்டும் தான் நோக்கம், வேறு ஏதாவது நலநோக்கம் இந்த அரசுகளுக்கு இருக்கும் என்று நீங்க நினைத்தால், உங்கள் விட கூமுட்டை யாரும் இருக்கமுடியாது!

ஒரு ஸ்டேசனுக்கு ,ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் 5 கேஸ், மாதத்தில் 15 நாள்

ரூரலில் அபராதம் 2000

அர்பன்னா அபராதம் 1000

2000x5= 10000x15= 1,50,000

ஒரு மாவட்டத்துக்கு 30 ஸ்டேசன்

30x1,50,000= 45 லட்சம்

45 லட்சம் x 30 மாவட்டம் 13,50,00000 கோடி

வருசத்துக்கு 13,50,00000x12=1620000000

அப்பாடியோ அபராதமே 100 கோடிய தாண்டுது

அப்புறம் டாஸ்மாஸ்க் விற்பனை

தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும் 87 லட்சம் பெட்டிகள் ரம்மும் , 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும் , 8 லட்சம் பெட்டிகள் ஜின் 7 லட்சம் பெட்டிகள் ஓட்கா 8 லட்சம் பெட்டிகள் ஒயினும் விக்குதாம்

கணக்கு போட்டு பாருங்க
இப்பவே கண்ணகட்டுதா?
இப்படி டபுள் வருமானம் உள்ளத விட உங்களப்போல அரசு இளிச்சவாயனா என்ன ?

குடிக்காதவங்கள வெச்சு குடிக்கறவங்ககிட்ட அட்ட டைமில் ரெண்டு தபா பிக்பாக்கெட் அடிச்சு சம்பாரிக்கும் அரசை, குடிக்கறவங்கள வெச்சு, குடிக்காதவங்க கிட்ட நல்ல பேரையும் சம்பாரிக்கும் அரசை அர்தத சாஸ்திரத்துக்கு பிறகு இங்குதான் காணமுடிகிறது

May 30, 2009

குப்பைத்தொட்டியில் கிடக்கிறது ஒரு கருப்பை

தீண்டப்படாத இடம் யாதுமில்லையென்றபோதும்

பிளவுபட்ட நாக்குகளை தின்றுவிடும் அகோர வெரியோடு

ஊர்கிறது


சமாதிகளில் வழியும் உயிரை நக்கும்

அதன் நகர்வுகளில் நெரிகிறது குழந்தைகளும்

அதன் பொம்மைகளும்


சாட்சியமே அழித்ததற்க்காய்

பிராந்திய வேசம்கட்டி

சதையையும் பிட்டுத்தருகிற

கொடூரங்களைக் கேட்டு உதிர்ந்த காதுகள்

உடலமெங்கும் முளைக்கிறதுஏலாமையில்வடிந்தகுற்றவுணர்வில்

குதித்து

வலியின் வேர்கள் பிளக்க

தவணையில் சாகிறது மனசு


‘கசப்பில் வழிந்த துளிகள்

இறுகி படிக்கட்டுகளாகும்’


நம்பிக்கையின் கீற்று அற்றுப்போன

சிதிலங்களில் பெய்கிற பேரிடியில்

பிணவாசனையெழும்பி உலகத்தில் ஒவ்வொருவனின் நுரையீரலையும் நிரப்பும்

அண்டெனும்

எட்டிப்பாருங்கள்

சர்வதேசத்தின் குப்பைத்தொட்டியை

May 21, 2009

பிரபாகரனோடு மூன்று நாட்கள்

மே13அல்லது 14 ஆம் தேதி இரவு நெருங்கிய,(EPRLF) பி எல் எப் ன் ஆதரவாளர் ஒருவர் திடுக்கிடும் செய்தியை சொன்னார்

ஈழத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக அரசு அதை மறைத்துவைத்திருக்கிறது தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்கள்என்பதுதான் அந்த திடுகிடும் செய்தி

அந்த முக்கியமான தலைவர் பிரபாகரன்.

எனக்கு பெரிய அதிர்சி ஏற்படவில்லை.

அப்படியா?

ஆம், நானும் எங்கேயோ படித்தேன் இந்திய இலங்கைக்கு இருக்கும் ரகசியஒப்பந்தமே அதுதானே!

ஆனால் பிரபாகரன் அங்கில்லை என்று சொல்கிறார்களே?

அவருக்கு தெரிந்த செய்தியின் மேல் லேசான சந்தேகத்துடன்பார்ப்போம்என்றார்

பின்பு 17 ஆம் தேதி அவரே அழைத்தார்

நல்ல தூக்கத்தில் இருந்தேன்

பிரபாகரன் இறந்துவிட்டார் CNN IBN ல் பாருங்கள்என்றார்

அப்படியா பார்க்கிறேன்

ஆனால் பார்க்கமுடியவில்லை

மாலையில் நிதானமாக எனதுவேலைகளை முடித்துவிட்டு

அவரோடு இருந்த மற்ற தோழர்களையும் சந்தித்தேன்

மலை மலரைக்காட்டினார்கள்

மாலைமலரை விரித்துக்காட்டிஇதோ பேப்பரில் போட்டுவிட்டார்கள்என்று காட்டினார்கள்

வேனில் தப்பிக்கும்போது ஏவுகணை வீச்சில் அனைத்துமுன்ணனி தலைவர்களோடு பிரபாகரனும் கொல்லப்பட்டார்

தோழர் எனக்கு நம்பிக்கையில்லை

மாலைமலரில் இவ்வளவு பெரிசாய் போட்டிருக்கிறான் நம்பமாட்டீங்களா?

மாட்டேன்,! இதே போல் நான்குமுறை போட்டிருக்கிறான், நானும் படித்திருக்கிறேன்!

அப்புறம் மாலைமலரில் போடுவதையெல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லையென்றேன் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்

பிரின்டேடு மேட்டர் எல்லாம் உண்மை என்று நம்பும் அறிவின் வயதை கடந்து வெகுகாலமாகிவிட்ட எனக்கு அவர்களின் போக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

அவசரமாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு என்னை அங்கிருந்து நகர்த்தியது

அப்புறம் எனது வேலைகளில் மூழ்கிவிட்டேன்

இரவு மக்கள் தொலைக்காட்சியில் நெடுமாறன் மறுத்தார்

பிறகு அடுத்த நாள் காலை11மணிக்கு முக்கியமான விடுதலைப்புலிகளின் அன்புக்கு பாத்திரமான ஒரு நேர்மையான தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் சொன்ன தகவல்

ஆண்டணிகூட இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது

பிரபாகரன்?...

கிட்டதட்ட 30 நாட்களுக்குமுன்பே சகபோராளிகளால் வலுக்கட்டாயமாக பாதுகாப்பான இடத்திற்க்கு அழைத்துகொண்டு செல்லப்பட்டுவிட்டார் தம்பி நலமாய் இருக்கிறார்

அன்று நண்பகல் இரண்டு மணிக்கு தொடக்கத்தில் சொன்ன வட்டத்திலிருந்து ஒரு தோழர் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்

அது

We are sorry to inform that LTTE leader prabhakaran died

Breakingnews:Prabhakaranbodyfound
கிட்டதட்ட எல்ல தொலைகாட்சிகளும் அறிவித்துவிட்டது

நிறைய அழைப்புகள் எனக்கு வந்தது ஆச்சரியமாய் இருந்தது

எல்லா அழைப்பும் மிக பதட்டத்தோடும் அதில் பிரபாவின் மரணம் நிகழ்திருக்கக்கூடாது என்ற அக்கரையோடும் இருந்தது இதில் காங்கிரஸ்காரர்களும் உண்டு என்பதுதான் ஆச்சரியம்.

நான் எல் டி டி யின் ஆதரவாளனுமல்ல. சொல்லப்போனால் நான் ஈபியின் ஆதரவாளானாய் ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தவேலிகள் தகர்த்துஎன்ற எனது நீள் கவிதை வெளியீடு புலிகளுக்கு எதிரானது

இந்த அரக்கத்தனமான போர் தொடங்கும் வரை எனக்கும் புலிகளின் மேல் கடுமையான விமர்சனங்கள் உண்டு அதை அழைத்தவர்களோடு பகிர்ந்துமிருக்கிறேன்

பிறகு எப்படி இத்தனை அழைப்புகள்...

எதற்கு இத்தனை அழைப்புகள்

பிறகு மதியம் காந்திபுரம் சென்றுவிட்டு வருகிற வழியில் மீண்டும் அவர்களை சந்திக்கநேர்ந்தது

இப்போது

மாலைமலரோடு TIMESNOW ம்

இப்பவாவது நம்பறீங்களா?

அது சட்சாத் பிரபாகரன் மாதிரியே இருந்தது

பார்த்தவுடன் தெரிந்தது

மிகவும் இளமையான முகம்,

மெழுகுபோல் பளபளவென்று அவ்வளவு அழகு,!

புலிகளுக்கு வயதாவதில்லை என்று சிங்கள அரசு அறிவித்தாலும் அறிவிக்கும்!

அனேகமாய் அது 93 ல் எடுக்கப்பட்டிருக்கலாம்,!

அப்புறம் அவர் சமீப காலமாக மீசை வைப்பதில்லை

இங்கே ட்ரீம் செய்யப்பட்ட மீசை

அப்படியே மீசையை விட்டிருந்தால் தாடியையும் விட்டிருப்பார்தானே

எனக்குள் சின்னசந்தேகம் துளிர்விடத்தொடங்கியது

இப்பவாவது நம்பறீங்களா?

இல்லை !!!

அரசாங்கமே சொல்லுகிறது...

அரசு, குடும்பம் தனிச்சொத்து பற்றி ஏங்கல்ஸே வந்து சொல்லுவார்

நீங்க எப்பதான் நம்புவீர்கள்?

புலிகள் அறிவித்தால்.....

அவர்கள் அறிவிக்க மாட்டார்கள்.....

நானும் நம்பமாட்டேன்

நல்லதுதான் அஞ்சலிகூட்டம் நடத்தமாட்டீர்கள்...

அவர்பேச்சில் விசம் இருந்தது

தோழர் நீங்கள் அவரது சாவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறீர்கள்... அதனால் நீங்கள் நம்பவேண்டியிருக்கிறது

நீங்கள் எதிர்பார்க்கவில்லை ஆகவே நம்பமாட்டீர்கள்

நான் சாதாரண மனநிலையில் இருந்து பார்க்கிறேன் என்னை நம்பவைக்கும் நம்பகத்தன்மை அந்த படத்தில் அந்த வீடியோ காட்சிகளில் இல்லை

அது என்ன சாதரண மனநிலை ?

சோவை ஆதரிக்கிறவர்கள் இப்படி ஒரு மனநிலையில் இருந்து பேசுவதை மறுக்கிறார்கள் என்பது முரண்நகை

இல்லை நீங்கள் புலிகளின் தீவிர ஆதரவாளர் அன்னைக்கு அப்படித்தான் கருணாவின் பேட்டியை ஜெரக்ஸ் எடுக்க வண்டிகூட கொடுக்கமாட்டேன் என்று மறுத்தீர்கள்?

(தினமலரில் வந்திருந்த கருணாவின் பேட்டியை ஜெராக்ஸ் எடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தனர்)

ஆம், மக்கள் மோசமாக செத்துக்கொண்டிருக்கும் போது அதை முன்னிறுத்தாமல் அது பற்றிய செய்திகளை வெளியிடாமல் புலிகளை விமர்சிக்கும் அப்பேட்டியை வெளியிடவேண்டிய அவசியம் என்ன? இது எந்தவகை அரசியல் ?

‘நீங்கள் என்னமோ சொல்லிக்கொண்டுபோங்கள் செத்தாச்சு பிரபாகரன் இனி அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது’

தனிமனித கொலையும் இந்த சமுதாயத்தை மாற்றுவதில் சிறிய பங்குவகிக்கும் என்று நக்ஸலைட்டுகள் நம்புவது தவறு என்ற கருத்தை வைத்திருக்கிற இவர்கள் இப்படி பேசுவது எந்த மேல் கட்டுமானம் என்று தெரியவில்லை

டைவட் ஆகுது.. சரி ரூட்டுக்கு வருவோம்

சரி தோழர் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அது இந்திய அரசுக்கு பேரிழப்பு..இந்திய அரசு அவர்களுக்கான ஒரு channel இப்பவரை ஓப்பன் செய்து

வைத்திருப்பார்கள் முற்றும் முழுதாக இந்தியா ராஜபக்ஸேவை நம்பியிருக்காது இலங்கைக்குள் தனது பொருளாதார விளையாட்டை தொடங்கியிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு counterஆக அங்கு இவர்களின் பலவீனப்பட்ட அல்லது இந்தியாவை சார்ந்திருக்கிற ஆதரவு சக்தி இருப்பதை விரும்புவார்கள்

புலிகள் அப்படி யாருக்கும் கைப்பாவையாய் இருக்காதவர்கள்,.அடங்கமறுத்து அத்துமீறுபவர்கள் ,மிக அர்பணிப்பு உள்ளவர்கள், தனதுமண் அடுத்த நாடுகளின் மார்கெட்டாக மாறுவதை அனுமதிக்காதவர்கள்.. 'இம்' என்று ஒருவார்த்தை சொன்னால் இப்போதே எல்லாமே தலைகீழ் ஆகிவிடும் ...

அடுத்த கூட்டத்தில் வாய்ப்பிருந்தால் அதுகுறித்து விரிவாக பேசுகிறேன்

இலங்கை அதிகாரிகளின் முரண்பட்ட பேட்டிகள்,

ஒவ்வொரு நாளும் புது புதுசாய் பிரபகரனைக்கொல்வது,

இன்ஸ்டண்ட் டி என் டெஸ்டுகள்,

எனக்கு நம்பிக்கையில்லை இதில் சந்தேகங்கள் இருக்கிறது...

புறப்பட்டுவிட்டேன்

இன்று 21.5.2009

நக்கீரன், இயக்கத்தின் தலைவர் உயிரோடு இருப்பதை 1000 மடங்கு நம்பகத்தன்மையோடு சொல்லியிருக்கிறது

எனக்கு இருக்கும் சந்தேகங்கள்

1 30 நாட்களுக்கு முன்பே பாதுக்காப்பான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட பிரபா நக்கீரனின் கட்டுரைப்படி அங்கேயே எப்படி இருந்திருப்பார்

2 தேர்தலுக்கு முன்பு அறிவித்தால் முடிவுகள் பாதிக்கும் என்று ஆளும் கட்சிகள் நினைத்து வெளியிடாமல் வைத்திருந்தது என்று சொல்கிறார்கள் இதை வெளியிட்டால் தமக்கு சாதகமான முடிவு உறுதியாக கிடைக்கும் நிலையில் உள்ள ஆதரவு கட்சிகள் வெளியிட்டிருக்கலாம்தானே! அப்படி நடந்திருந்தால் நடேசன் இதைக்கூடவா சொல்லியிருக்கமாட்டார்?

3 கருணா ராஜீவ்கொலை நடந்த சூழல் பற்றி ராகுலுக்கும் பிரியங்காவிற்கும் விளக்குவேன் என்று இப்பொழுது சொல்லுவானேன்?

4 அம்பாரையில் சீனாவால் உருவாக்கப்பட்டிருந்த அல்லது சீனாவின் உதவியால் அமைக்கப்பட்டிருந்த கடற்படைதளம் ஒருமாதத்துக்கு முன்னால்புலிகளால் சுக்குநூறாக தகர்க்கப்பட்டது புலிகளோடு மேலும் வேறு யாருக்கு சாதகத்தை கொடுத்திருக்கும்?

5 ஒரு வல்லாதிக்க அரசால் முன்னெடுக்கப்பட்டு, ஒரு பேரினவாத அரசால் சனம் வேட்டையாடப்படுகிற போரில் ஒரு நேர்மையாளன் எந்தப்பக்கம் நிற்கவேண்டும், யார் சொல்வதை நம்பவேண்டும்?

அதே தோழர்கள் இக்கட்டுரையை முடிக்கும் முன்பு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார்கள்

PRABHAKARAN ALIVE I READ A NEWS IN NAKEERAN. IS IT POSSIBLE’ ?

நானும் பதில் அனுப்பியிருக்கிறேன்

அந்த பதில்...

இதற்க்கெல்லாம் பதிலை பிரபாகரன் வந்து சொல்லுவார்

May 08, 2009

நினைவில் சுழலும் முள்ளின் மீதேறி நின்று


இந்த சம்பவத்தை சொல்லாமல் விசயத்துக்கு வரமுடியாது ஆகவே இதிலிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும்
"இங்கே சேரன் பஸ் டெப்போ சீக்கிரமாய் வரப்போகிறது!" "பக்கத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வரப்போகிறது" "ஒரு ரிங்ரோடு உங்கள் வாசல் வழியாக மருதமலை செல்கிறது"
"இது உங்களுக்கு அதிஷ்டமான நாள்" "சீக்கிரமாய் இந்த சைட்டை வாங்கிப்போடுங்கள்" வாங்கி அடுத்த மாசம் வித்தாலும் செண்டுக்கு 10 ஆயிரம் லாபம் கிடைக்கும்’ யாரோ சொன்னதை அப்படியே நம்பி 5 செண்டை வாங்கிப்போடுகிறார் கோவை அரசு பொரியியல் கல்லூரியின் விரிவுரையாளராய் இருந்த பெருமாள் சார்
பெருமாள் சாரைப்பொறுத்தவரை எளிமையானவர்,
கஸ்டப்பட்டு படித்து நல்லநிலமைக்கு வந்தவர் அநியாயத்துக்கு நேர்மையானவர், தப்பு நடந்தால் மனதுபுழுங்கி வெம்பி எதிராக ஏதாவது செய்துவிடுவார் , கிட்டத்தட்ட ஸ்ரக்சுரல் எஞ்சினியரிங்கில் அவர்தான் கில்லி! அது குறித்து நிறைய புத்தகமும் எழுதியிருக்கிறார்.. இடம் வாங்கியதோடல்லாமல் பிடிவாதமாக கட்டிடமும் எழுப்பிவிட்டார் தன்னந்தனியாய் ஒரே ஒரு வீடு சுற்றிலும் சோளக்காடு கூப்பிடும் தூரத்தில் எந்த வீடுகளும் கிடையாது!
சந்தோசமாய்போய்கொண்டிருந்த அவரது வாழ்வில் ஒரு சின்ன கீறல்
இது பத்து வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம்
நிலாவுக்கு ஹேபியஸ் கார்பஸ் போடவேண்டிய இரவு......... பூச்சிகள் சில்லிட்டுக்கொண்டிருந்தது.......... தூரத்தில் நாய்கள் குலவையிட்டுக்கொண்டிருந்தது........
மணி ஒன்றை கடந்துவிட்டது தடதடவென முன் கதவு தட்டப்படுகிறது...................... யாரது ?........... பதிலில்லை............ யாரய்யா......அது ......இது பெருமாள் சார் நாங்கதான்............ கதவுக்கு வெளியிலிருந்து குரல் நாங்கன்னா யாரு................. நாங்க திருடங்க!!!!!!!!!!!!!!!!!!!!! திருட வந்திருக்கோம் கதவ மரியாதயா தொறங்க! சத்தம் கித்தம் போட்டீங்க தொலஞ்சீங்க!
எல்லா ஜன்னல்களையும் திறந்துவிட்டு குடும்பமே குரலெலுப்புகிறது
ஜன்னலுக்கு பக்கத்தில் வந்து கத்துவதை தடுக்க கல்லெடுத்து எரிகிறார்கள் இரண்டு திருடர்கள்
ஒருவன் பின்கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தே விட்டான் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேர் உள்ளேவர
இரண்டுபேர் முன்புறம் பாரமில்ட்ரி
ம் இப்ப கத்து பாக்கலாம்? திருடன் சவால் விட
என்னவேணுமின்னாலும் எடுத்துட்டு போங்கபோங்க?
பெருமாள் சாரும் குடும்பமும் ஒதுங்கி நிற்க
பெண்களின் காதில் இருந்த கம்மல்கள் கைமாறுகிறது பீரோக்கள் புரட்டப்படுகிறது
'இன்னக்கி சம்பளநாள் தானே எங்கே கவரை எடு?'
'இல்லீங்க, இன்னக்கி முப்பதுதானே, நாளக்கி தான் சம்பளம்! இந்த மாசம் முப்பதியோரு நாட்கள்'
பவ்வியாமாய் விளக்கமளித்தார் பெருமாள்சார்
அவர்கள்என்ன திட்டத்தோடுதான் வந்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் உரைத்தது
டீ போடமாட்டீங்களோ?
'நாளில் ஒன்று சக்கரகம்மி ' ஏதோ டீ கடையில் ஆர்டர்கொடுப்பது போலவே சொன்னான் ஹார்லிக்ஸ் இருக்கா?
இல்லீங்....
அவர் மனைவி டீ போட்டுத்தர நிதானமாய்குடித்துக்கொண்டிருந்த போதே
வெளியே சத்தம்

கத்தல் எப்படியோ கசிந்து கசிந்து ஊரின் ஓரத்தில் குடியிருந்த வெல்லத்துகார ராமசாமி அண்ணனைனை( எக்ஸ் வெல்லவியாபாரி)எட்டியிருந்திருக்கிறது
பதட்டத்தோடு வந்தார்
'வாங்கண்ணா!'
புதிய முகத்தை பார்த்து திடுக்கிட்டு நின்றவரை
'வாங்கண்ணே ஏ நின்னுட்டீங்க?'
திருட்டுக்கும்பல்தான்... தாட்சண்யமின்றி வரவேற்றது புது முகமாய் இருக்கிறதே என்று விபரீதம் உணர்ந்தவர் திரும்பி ஓட்டமெடுத்தார் அதற்க்குள்
அவசர அவசரமாக சேந்தமங்களத்திலிருந்து உறவினாரால் கொண்டுவரப்பட்ட மாம்பழக்கூடை, டேப் ரெகார்டர், கேசட்டுகள், கம்பளி, கம்மல், இவற்றையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு நடையக்கட்டினார்கள்
போன வெல்லத்துக்காரர் ஊர்க்காரர்களை கூட்டி திரும்பிவரும்போது
எல்லா காட்சிகளும் முடிந்துபோயிருந்தது.
முதலில் கால் பகுதி மட்டும் காட்டப்பட்டு மெல்லமாய் கேமரா மேலேரி முழு உருவத்தையும் காட்டுகிறது
இசை கூடுகிறது
அந்த உருவம் வேறு யாருமில்லை நானே தான்
இங்குதான் எனது என்ட்ரி ஆரம்பமாகிறது குழந்தைகள் பயந்துக்குது கொஞ்ச நாள் இங்கு யாரவது வந்து நிலமையை சரிசெய்து பாதுகாப்பு கொடுத்தல் இருக்கிறேன்
இல்லையென்றால் திரும்பவும்
கோட்டர்ஸ்க்கு திரும்பிவிடுகிறேனென்றார் வாத்தியார்

இதை பயன்படுத்தி அந்தவீட்டை சில புள்ளிகள் அடிமாட்டுவிலைக்கு கேட்டார்கள் காலிபண்ணி விற்க்கவைக்கவே இப்படிமிரட்டியிருக்கிறார்கள் என்ற வதந்தி இன்னும் ஊருக்குள் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறது. இதைக்கேள்விப்பட்டு எங்களுக்கு ஜிவ்வென்று ஏறியது
ஒரு முடிவெடுத்தோம்
‘அவரை போகவிடக்கூடாது’
இந்த வீட்டை காலிசெய்யவிட்டுவிடக்கூடாது’

அவரோடு பேசினோம்
முதன் முதலாய் அவரை பார்த்தபோது அவர் சொன்ன வார்த்தை ‘பாவங்க நம்மல விட கஷ்டமாயிருக்கிறதனாலதானே நம்மகிட்ட திருட வறாங்க....இல்லீங்களா?
இந்த பார்வை எத்தனை பேராசிரியர்களுக்கு வரும் இதற்க்காக
கேசைக்கூட பெரிதாக அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்ட இவரை நாம் இழக்கக்கூடாது
நாங்கள் வாக்குகொடுத்தோம்
சந்தோசப்பட்டார்..
நான் சிவக்குமார்,பழனிசாமி,ராமசாமி ,தங்கவேலு .பாலாஜி,ரமேஷ்
இன்னும் பலர்.....................
இதில் ரமேஷ்தான் சீனியர்
இரவானால் பெருமாள் சார்வீட்டுக்கு சென்று காவலிருப்போம் வெடிய வெடிய கொட்ட கொட்ட முழிச்சு
விசிலடித்து...
ரோந்து போகிறது...... இதெல்லாம்
ஒரு மாதம்தான்
அப்புரம் வழக்கமான காவலுக்கு வந்திருந்தோம் வழக்கமான காவல்னா வேறொன்றுமில்லை
போனவுடன் நல்ல டீ கிடைக்கும்.,
(திருடனுக்கே நல்லா டீ போட்டுகொடுத்த குடும்பம் நமக்கு குடுக்காதா என்ன?!!!!!!!!!!!)
கொஞ்ச நேரம் கேரம் விளையாடுவோம் ,
பேப்பர் படிப்போம்
அப்புறம் கொரட்டைவிட்டு தூங்குறதுதான்
காலையில் எழுப்பி நல்ல காபியொன்று தருவார்கள் அதற்கு சரசூஸ் காப்பியென்று பேர்
புதுசாருக்கில்ல! அது வேரொன்றுமில்லை பெருமாள் சாரின் மனைவி பெயர் சஸ்வதி
( இப்படித்தான் அவரிடமும் சொல்லுவேன்)
குடித்துவிட்டு கிளம்பவேண்டியதுதான்
அப்புறம் ஞாயிறானால் கூவிவிடுவார்
(சிக்கன்) ப்ரொபஸர் அப்படித்தான் சொல்லுவார்
போண்டா ...
இந்த போண்டாவிற்க்காகவே காவலுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் இது கிட்டத்தட்ட மூன்றுவருடம் தொடர்ந்தது எங்களுக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது அப்புறம் அவர் தைரியமாய்
எல்லாவற்றையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார் இரண்டுவீடுகளும் அவர் பகுதிக்கு புதிதாய் வந்துவிட்டது எங்கள் சேவையை அந்த வீடுகள் எடுத்துக்கொண்டுவிட்டது
இந்த காலகட்டத்தில் அவர்கள் குடும்பத்தோடு ஐக்கியம் ஆகிவிட்டோம்
அவருடைய குடும்பம் மிக அழகானது இரண்டு பெண்கள் மணிமேகலை- பெரிய மகள்-மெளனி பானுமதி -சின்ன மகள்-வால் சரவணன் மகன்-ஜாலி
எங்கள் மேல் அவர்களுக்கும் அவர்கள்மேல் எங்களுக்கும் அதீத அக்கறை துளிர்விடத்தொடங்கிய காலகட்டம் கிட்டதட்ட நெருங்கிய சொந்தம் போலவே ஆகிவிட்டோம்
மிக அதிக அக்கறை சில எதிர்பார்ப்புகளை விதைத்துவிட்டிருந்தது
இந்த தொடர்பைவைத்து காவலுக்கிருந்த நிறைய பேர் அவரிடம் ஆட்டையப்போட்டிருக்கிறார்கள்,
நிறையபேர் தங்களுக்கான சில வேலைகளை சாதித்திருக்கிறார்கள்,
சிலர் அவரிடம் அரசியல் செய்திருக்கிறார்கள்
ஒரு காரியம் செய்யதுவிட்டு அந்த தொடர்பை வலுப்படுத்தி வைத்துக்கொள்வதோ அல்லது அதற்க்கு பிரதி பலனாக சில காரியம் சாதித்து கொள்ளுவதோ இரண்டையும் எனக்குள் இல்லாமல் செய்திருந்ததது மக்கள் பண்பாட்டு இயக்கம்
என்னை பொறுத்தவரை அதற்கு பிறகு அந்த தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்துவிட்டு வழக்கம் போல நான் இயங்க ஆரம்பித்துவிட்டேன்

அவரது பிரச்சனை முடிந்துவிட்டபின்பு நாம் எதற்காக அவரோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும் என்றுதான் தெரியவில்லை அதுதான் பிரச்சினையாகிவிட்டது
வழக்கம்போல் இல்லையென்றாலும்
வாரம் ஒருமுறையோ மாதம் ஒருமுறையோ வந்துவிட்டுபோலாமே -இது அவர்களின் வேண்டுதல்
ஆனால் வருடம் ஒருமுறைகூட போகவில்லை
இது தப்பா என்று தெரியவில்லை
ஆனால் வரும்போதுபோகும்போது பார்த்தால் பரஸ்பரம் ஒரு புன்னகையும் நேரமிருந்தால் சின்ன உரையாடலும் ஒரு ஹாயும்
இருந்துகொண்டுதான் இருந்தது

நான் போகாவிட்டால்கூட அவர்கள் வந்திருக்கலாம்தானே?
எனக்கு அப்படிக்கேட்கக்கூட தோணவில்லை

மணிமேகலையின் திருமணத்துக்கு போக முடியவில்லை சென்னையில் இருந்தேன்
இருந்தாலும் போயிருக்கமாட்டேன்
தலித்,மற்றும் இஸ்லாமியர் கல்யாணங்களைதவிர 99.99 % எங்கும் போவதில்லை
இது என்ன கொள்கையோ தெரியவில்லை ஆனாலும் ஊரிப்போய்விட்டது

அப்புறம்கூட அதே பரஸ்பர புன்னகையும் 'ஹாயும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது
மணி புதிதாகவீடுகட்டியிருக்கிராள்
யாரையும் அழைக்கவில்லை புதுமனை புகுவிழவை
ரொம்ப சிம்பிளாக வைத்துவிட்டோம் என்றார்கள்
நல்லவேளை தப்பித்தேன் என்றிருந்தது
அதற்கு பிறகுதான் தெரிந்தது
சிலபேரை அழைத்திருக்கிறார்கள்
உள்ளூர் அரசியல் அவர்களையும் ஆட்டிவைத்திருப்பது.
கொஞ்சம் மனது கனக்க ஆரம்பித்த போது எனக்கே ஆச்சரியமானது
அப்புறமும் தொடர்ந்தது
அதே புன்னகை
அதே ஹாய்
போனமாதத்தில் ஏதோ ஒரு தேதி-3-2009 அன்று
பெருமாள் சார் பொண்ணின் குழந்தை இறந்து விட்டது எழவுக்கு போகலயா? சம்பந்தமில்லாத ஒருவர் கேட்டார்]
அதிர்சியானேன்
எப்படி?
‘நல்லாதான் இருந்ததாம்
உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போனார்களாம்
மருந்த தப்பா மூக்கில் ஊத்திட்டாரம் டாக்டர்’
மனசு கொதித்தது,
எவனந்த டாக்டர்?
மிகமிகமிகமிக மென்மையும் பிடிவாதமும் கலந்த இந்த ஜீவானால் இதை எப்படி
தாங்கிக்கொள்ளும் என்று நினைத்தபோது மனசுக்குள் கஸ்டமாயிருந்தது
எப்ப நடந்தது?
ஒரு வாரமாச்சுன்னே!
அப்படியா?
அப்புறந்தான் கேட்டேன்
மணிக்கு எப்ப குழந்தைபிறந்தது ?
“நல்லா கேட்டீங்க போங்க
ஒரு மாசம் இருக்கும்.... கொழந்த பொறந்தததே உங்களுக்கு தெரியாதா?’
இல்லை!
ஏதோ குற்ற உணர்வும் ஏமாற்றமும் பாம்பாகி ஊற ஆரம்பித்து
ச்சே வைரவனாவது(மணியின் கணவர்) ஒரு ஒரு மெசேஜ் பண்ணிருக்கலாமே!
ஒருவாரம் கழித்து பிறப்புக்கு போகாமல் இறப்புக்குமட்டும் போக மனது
இடங்கொடுக்கவில்லை
இடையில் வைரவனை பார்த்தபோது கேட்டும்விட்டேன்
வைரவனிடமிருந்து இதற்க்கு பதிலுமில்லை
இப்பொழுது எதிரில்
மணியை பார்த்தாலும்.....
பானுவைப்பார்த்தாலும்......
வைரவனைப்பார்த்தாலும்.......
யாரும் புன்னகைப்பதில்லை
யாரும் ஹாய் சொல்வதில்லை
சின்ன உரையாடலும் கிடையாது
ஆனாலும் மனதுக்குள் அந்த குடும்பம் நீங்காத இடத்தை ஆக்கிரமித்திருப்பதை
உணரமுடிந்தது
அங்கே தங்கியிருந்தபோது
அன்யோன்யத்தை உணர்ந்திருக்கிறேன்............
அப்பழுக்கில்லாத நேசத்தை பெற்றிருக்கிறேன்...........
அக்கறையை பெற்றிருக்கிறேன்
நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்,

எப்பவாது அந்த திருடர்களைஅடையாளம் கண்டால் மெலிதாய் புன்னகைத்து ஒரு நன்றிசொல்ல வேண்டும்
அவனாவது ஹாய் சொல்லுவானா?


Footer