November 05, 2010

ஒரு கொலை, தண்டனையில்லாமல்-சந்தனமுல்லை


ஞாயிறு எல்லோருக்கும் விடிவதைப்போலத்தான் விடிந்திருக்கும் ‍ - குடும்பத்தின் சம்பாதிக்கும் ஒரே நபரான அம்பிகாவிற்கும். தான் ஒரு படுகொலையை சந்திக்கப்போவது தெரியாமல் ,அடுத்தடுத்த நாட்கள் பற்றிய திட்டமிடல்களோடும், எதிர்காலம் பற்றிய எண்ணங்களோடும், ஏழேமுக்கால் முதல் பத்தேமுக்கால் வரையிலான ஷிப்டுக்கு வந்திருப்பார் அம்பிகா.

அம்பிகாவைப் பற்றி இணையத்தில் வந்திருக்கும் செய்திகளைப் படித்துத் தெரிந்துக்கொண்டிருப்பீர்கள். பல செய்தித்தளங்கள் கூறுவது போல ரோபோவால் தாக்கப்பட்டோ அல்லது மன உளைச்சலால் தற்கொலையோ அவர் செய்துக்கொள்ளவில்லை. முக்கியமாக அது எதிர்பாராமல் நடந்த விபத்துமில்லை.

திங்களன்று மதியம் செய்தியைக் கேள்விப்பட்டபின், அவரது உடல் அப்போலோவில் இருப்பதாக அறிந்து நேரில் சென்றேன். அவருடன் வேலை செய்யும் உடன் ஊழியர்கள் சிலரையும் சந்தித்தேன். சுமார் 50 முதல் 100 பேர் குழுமி இருந்தனர். சராசரியாக அவர்கள் வயது இருபது அல்லது இருபத்தியிரண்டுக்குள் தான் இருக்கும்.

வேலை செயும் இடமோ அல்லது கான்டீனுக்கோ, டாய்லெட்டுக்கோ எங்கு சென்றாலும் எந்நேரமும் கண்காணிக்கும் கேமராக்கள். உழைப்பை அட்டையைப்போல உறிஞ்சும், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற சூபர்வைசர்கள். வெளிநாட்டு முதலாளிகளின் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட உயரதிகாரிகள். கொத்தடிமைகளைப் போல வேலை செய்தும் ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் கூட கிடைக்காத நிலை. எப்போது வேண்டுமானாலும் துரத்தப்பட வசதியாக ஒப்பந்த முறையில் வேலை.

’பத்தாவது முடித்திருந்தால் போதும்,நோக்கியாவில் வேலை’ என்று சென்னையின் ‍- முக்கியமாக‌ புறநகர் பகுதிகளின் பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டுவது; மொத்தமாக 500, 1000 என்று ஏழை மாணவர்களை அள்ளிக்கொண்டு வரவேண்டியது. முதலாளிகள் நியமித்த டார்கெட்டுக்கும் முன் அவர்களது உயிருக்கும் மதிப்பில்லை. உற்பத்தியை பெருக்க வேண்டிய மற்றுமொரு எந்திரங்களே.

'தீபாவளிக்கு அப் அப் அப்கிரேட்' என்றும் நமக்குப் பிரியமானவர்களுக்கு பரிசளிக்க உகந்தது என்றும் விளம்பரப்படுத்தப்படும் செல்போன்களும், கேட்ஜெட்டுகளும், குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தக் கொத்தடிமைகளைத் தாண்டியே வருகின்றன. உயிரே போகும் அபாயகட்டத்தில் இருந்தாலும் நிற்க மறுக்கும் எந்திரங்களைத் தாண்டியும்...

உலகின் ஏதோ ஒரு மூலையில் விற்கப்படப்போகும் செல்போனின் மதர்போர்டை காப்பாற்ற முனைந்து
கட்டிங் மெஷினால் கழுத்தறுப்பட்டிருக்கிறார் அம்பிகா. பக்கத்திலிருப்பவர்கள் பார்த்துவிட்டு, கத்தியும் செக்யூரிட்டிகளோ சூபர்வைசரோ உதவவில்லை. 'எமர்ஜென்சி' மூலம் எந்திரத்தை நிறுத்த முயன்ற ஊழியர்களையும் செக்யூரிட்டி தடுத்து தள்ளிவிட்டிருக்கிறான். இதற்குள் நான்கு முறை அலறி தலைதொங்கியிருக்கிறார் அம்பிகா. ”அங்கிருந்து அப்போல்லோ வருவதற்கு பதிலாக வழியில் வேறு ஏதாவது மருத்துவமனையில் ஏன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலாவது சேர்ந்திருந்தால் பிழைத்திருப்பாளே” என்று அங்கலாய்க்கிறார்கள் அம்பிகாவுடன் அதே ஷிஃப்டில் வேலை செய்தவர்கள்.

கட்டிங்மெஷினின் சென்சார்கள் இடையூறு வந்தால் ஓடாமல் நிற்கவேண்டும். ஆனால், அப்படி நின்றால் உற்பத்தி பாதிக்கும். திரும்ப ஓடுவதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். இதற்குள், ஏற்படும் உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு இந்தியாவின் மிக மலிவாகக் கிடைக்கும் மனித உயிரை இழக்கலாமே! இதுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்திருக்கிறது.

’அம்பிகாவிற்கு ஏற்பட்ட அதே நிலைதான் எங்களுக்கும்’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அடுத்த ஷிப்ட் வழக்கம் போல நடக்கும் என்பதாக.. அதை எங்களிடம் காட்டியபடி உடனிருந்தவர்களிடம் "அப்போவே அந்த மெஷினையெல்லாம் ஒடைச்சுபோட்டுட்டு வந்திருக்கணும் நீங்க" என்று பொருமுகிறார் அவர்.

அம்பிகா இறந்தபின் அடுத்த ஷிட் நடந்திருக்கிறது டெக்னீஷியன்களைக் கொண்டு.

க்ரூப் இன்ஷ்யூரன்சிலும் பெரிதாக எதுவும் கிடைக்காது. அம்பிகாவின் மரணத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக, பேச்சு வார்த்தையின் போது கிராஜூவிட்டித் தொகையை மட்டும் தருவதாக பேசியிருக்கின்றனர் நிர்வாகத்தினர். ஓய்வு பெறும்வரையிலான அவரது சம்பளத்தை கேட்டதற்கோ 'அது 52 லட்சம் வருது சார், எந்த கம்பெனி கொடுக்கும்' என்று பேசியிருக்கிறான் கம்பெனி ஹெச் ஆர். பேச்சுவார்த்தையை தற்போது எட்டாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

எங்களை வைச்சு எவ்ளோ சம்பாரிச்சிருப்பான், ரெண்டு கோடி ரூபா மெஷினை எமர்ஜென்சிலே நிறுத்த முடியாம ஒரு உயிர் போயிருக்கு, 52 லட்ச ரூபாய் கொடுக்க முடியலையா என்று கொந்தளிக்கிறார்கள். 'ந‌டந்தது விபத்தல்ல;கொலைதான்' என்றும் உறுதியாக உணர்ந்திருக்கிறார்கள். 'திமுகவும் அதிமுகவும் வந்தாங்களே, என்ன நடந்தது, எங்களை பத்தி எந்த கட்சிக்கும் கவலையில்ல' என்று வெறுத்துப்போய் பேசுகிறார்கள்.

ஒபாமாவிற்காக நாடே விழாக்கோலம் பூண்டு பட்டாசு வெடிக்கும் ஒலியில் அம்பிகாவிற்காக ஒலிக்கும் நண்பர்களின் குரலை கேட்பவர்கள் யார்?

அம்பிகா தனது தம்பியை படித்து ஆளாக்கியபின்னரே திருமணம் செய்துக்கொளவதாக உறுதியாக இருந்திருக்கிறார். வரும் ஜனவரி எட்டாம் தேதி திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவரது தம்பி தற்போது டிப்ளமோ இறுதியாண்டு படிக்கிறார். தற்போது அவரது தம்பிக்கு வேலை தருவதாக எது ஏதோ பெரிய உதவியாக நினைத்து வாக்களிக்கிறது நிர்வாகம். "ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு பிரதானமென்றும் இச்சம்பவத்தை கம்பெனியின் விதிமுறைகளுக்கேற்ப புலனாய்வு செய்வதாகவும்" அறிக்கை விடுகிறார்கள் கொலையாளிகள்.

அம்பிகாவின் இழப்பை எதுதான் ஈடு செய்ய இயலும், நியாயத்தைத் தவிர!

Footer