September 29, 2010

புதிய ழ வும் பழைய கசடதபற வும்


ஒரு கட்டத்தில் கோவைமாநகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று கவிதை என்று பேசுகிற அத்தனை இளசுகளும் மொத்தமாய் கூடும் ஓர் இடம் பாசறை அதை ஆரம்பத்தில் அண்ணன் மரபின் முத்தையாவும் தற்போது தனது இலக்கியத்துக்கு 302 செக்ஷன் போட்டுவிட்டு நீதிபதியாகி போய்விட்ட அண்னன் தமிழினியனும் சேர்ந்து குஜராத் சமாஜில் நடத்துவார்கள் எல்லா கல்லூரிகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள் அது கவிஞர்களின் வேடந்தாங்கலாய் இருந்தது என்றுகூட சொல்லலாம்

என்றும் பாசறை தனக்கான அரசியலை விட்டுக்கொடுக்கவேயில்லை அரசியல் வகுப்புகள் என்று தெரியாத அளவுக்கு அரங்கம் தொடர்ந்து ஒர் பெரும் பட்டாளத்தை தயார் செய்திருந்தது. அப்போது நாங்கள், நாங்கள் என்றால் சின்ன குழுதான் முழுக்க அவர்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைசி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு டிராட்ஸ்கியயும் கிராம்ஸியையும் அதர்க்கு சம்பந்தமே இல்லாத சிலபேரையும்பிடித்துவந்து உட்காரவைத்துக்கொண்டு குதரிக்கொண்டிருப்போம் மண்டயோடுகளில் மார்ட்டின் மலம் கழித்து வைப்பான் பூபதி நார்த்போல் அட்டையில் இருக்கும் பூமி உருண்டையை வைத்துக்கொண்டு மீமாம்சம் பேசிக்கொண்டிப்பான் ஆனாலும் எங்கள் கவிதைகளையும் வாசிக்க தவறியதில்லை கட்டாயம் பெரும் பிரச்சினைகளாய்தான் நாங்கள் இருந்திருப்போம்

சரவணன் என்றொரு நண்பர் கடைசியில்தான் கவிதை படிக்க வருவார் எல்லோரும் படிக்கும்போது ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருப்பார் கடைசியில் எல்லோருடைய கவிதையிலிருந்தும் சொல்லையெடுத்து ஒரு டப்பாவுக்குள் போட்டு கலக்கி அடிப்பார் அது அரங்கத்தை நிசப்தமாக்கும்கடைசிவரை அந்த தொழில்நுட்பம் எங்களுக்குள் ரகசியமாகவே இருந்துவந்தது. இதுதான் நவீனகவிதை என்னும் நம்பிக்கையில் அந்த விக்கிரமாதித்தன் இன்னும் மனம் தளரவேயில்லை தற்போது வழக்கறிஞராக இருக்கும் அவருக்கு நாங்கள் வைத்தபெயர் கவிஞர் three eighty
சிலபேர் மேடையேறி சிலவிநாடிகள் நின்றுவிட்டு ‘’பிரபாகரன்’’ என்று மட்டும் சொல்லி விட்டு இறங்கிவிடுவார்கள்
‘’வவுனியா காடிருக்கும் திசைநோக்கி வணங்கி’’ சிலர் தொடங்குவார்கள்
தற்போது செய்தி வாசிப்பாளராக இருக்கும் சுந்தரராமன் மொசைக்கில் பழம் வழுக்குவதுபோல் இழைத்து இழைத்துப்படிப்பார்
மிகப்புகழ்பெற்ற ஹேர்லிக்ஸ் கவிதைவாசித்த பெரியவர் இப்போதும் பந்தயசாலையில் முத்தமிழ் அரங்கத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்

தமிழுக்கும் மரபுக்கும் பூ சாகோ கலை அறிவியல் கல்லூரியின் வார்புகள் என்ற ஒரு பெருமிதம் இருந்துகொண்டே இருக்கும் அது தவறில்லையென்றே தோன்றுகிறது ஒரு கட்டத்தில் அரசி¢யல் காரணமாக பாசறைக்கு குஜராத் சமாத்தில் இடம் கொடுப்பதில் பிரச்சனை நிலவிய நினைவு மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது மங்கலான நினவில் இருக்கிறது ஆனாலும் ஒரு விடாப்பிடியான வைராக்கியம் பாசறையை தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருந்தது
அதற்கு ஒரு காரணம் மாற்றுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையும் ஜனநாயகமும் அதன் வேரிலேயே இருந்தது என நினைக்கிறேன் ஏனென்றால் மரபும், தமிழும் நேரெதிர் துருவங்கள் ஒருவர் ஆத்திகம் மற்றவர் நாத்தீகம் ஒருவர் மரபு மற்றவர் புதுசு இருவரும் இணைந்து அரங்கத்தில் மின்னலிடும் கவிதைகளை தலையில் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் நல்ல கவிதைகளை புத்தகமாக்கவும் தயங்கியதில்லை

அப்பூரம் இலக்கிய பாசறை என்னும் இதழை கொண்டுவந்து மாதமாதம் அந்த அரங்கத்தில் வரும் கவிதைகளை வெளியிடுவார்கள் அது எத்தகையது இதை வெளியிடலாம என்று பலநேரம் பிரித்துகூடபார்த்ததில்லை
புவனாகிட்ட கேட்டால் ‘ஒருத்தன் எழுதறதே பெரிசு எடுத்த எடுப்பிலேயே அதை எதுக்கு காயடிக்கனும் எல்லாம் இப்படித்தான் தொடங்கும் ஆனால் இப்படியே தொடராது ’ அவர்களுக்கு வாசிப்புகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார்கள். அங்கேதான் நாங்கள் கே ஆர் பாபுவிடமிருந்து வெண்பாக்களையும் அவைநாயகனிடமிருந்து ஹைக்கூக்களையும் உள்வாங்கினோம் இலக்கிய ஆளுமைகளை என்று சொல்லும் சிலரை அங்கேதான் சந்தித்திருதோம்
ஒரு நாள் நாகர்ஜுனனின் கர்நாடகமுரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆய்வும் என்ற புத்தகத்தை வாசிக்க நேரிட்டது அது தமிழின் முதல் நான் லீனியர் புத்தகம் என்றே கருதுகிறேன் அது எங்களை நவீனகவிதைகளை நோக்கி தூக்கியெரிந்தது அப்புறம் ஆத்மநாம் வந்தார் பின் யாராரோ வரிசையாக நூல்பிடித்து வந்தார்கள். மூலங்களை கற்பது என்ற போக்கை முற்றிலுமாக கடாசிவிட்டோம்
நானும் பாசறையில் சாட்டைகளை சிலமுறை சுழட்டியிருக்கிறேன் ஆனாலும் அவர்கள் என்னை எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை அவர்கள் ஏற்படுத்திய வாய்ப்பு, கவிதை பண்ணையார்கள் இடம் பெறும் மாபெரும் அரங்கங்களில் எனக்கான இடத்தை தந்துகொண்டே இருந்தது நான் இளங்கலை பயின்றுகொண்டிருந்த நேரம் சென்னையில் நாங்கள் அனுதாபிகளாக இருந்த ம லெ(மக்கள் யுத்தம்) அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட அனைதிந்திய புரட்சிகர இலக்கிய அமைப்பில் (ALRC) ஒரிசா பெங்கால் பீகார் என்று இந்தியாவின் அனைத்து மாநிலமும் பங்குற்ற அந்த கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் ஒத்தையாய் மேடையேறினேன் அதற்கான தைரியத்தை நான் பாசறையிடமிருந்து கொஞ்சம் பெற்றிருந்தேன்

பாசறை இழுத்துமூடப்பட்டது அதற்க்குப்பினால் பெரும் இடைவெளி.................... கவிதைகளை விட்டுவிட்டு மீண்டும் களங்களுக்கு போனோம் களங்களில் குறிப்பாக சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் பணியாற்றி உளவுப்போலிசாரின் சரித்திரப்புகழ்வாய்ந்த டைரியில் எங்களுக்கென்று ஒரு இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டோம் அங்கும் கவிதைகளை கைவிட்டதில்லை பாடல்கள் மூலமாகவும் தொடர்ந்துகொண்டிருந்தோம் இப்படியாக நிறைய பதியமுடியும் அளவுக்கு அனுபவங்களை சேமித்திருக்கிறோம்
இன்று நெருஞ்சி இலக்கியமுற்றம்( என்னாச்சு மீனாட்சி),த மு எ ச, கலை இலக்கிய பெருமன்றம், பாரதி இலக்கிய பேரவை, சூலூர் இலக்கிய பேரவை, என்று நிகழ்வுகள் ஏதாவது ஒரு வடிவத்தில் எப்படியாகிலும் தொடர்ந்துகொண்டிருந்தாலும் பாசறை போல் மீண்டுமொரு ஜனநாயககாலம் வராதா என்று இப்போதும் சில பொழுதுகளில் ஏங்கியது உண்டு

பேராசிரிரர் மணிவண்ணால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அனைவரையும் அரவனைக்கும் புதிய ழ பாசறையின் சில கூறுகளோடு வளர்வது மகிழ்சியளிக்கிறது

September 25, 2010

ஆதிவாசிகளை ஏமாற்றும் நகரவாசிகள் - தமிழக அரசியல் -பாமரன்


அமெரிக்காவில் செவ்விந்தியப் பழங்குடிகள் பட்டபாட்டையும்... மாயன் பழங்குடியினரைப் பற்றியும் மண்டையை உடைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் நம் உள்நாட்டு ஆதிவாசி மக்களைப் பற்றிய கவிதை நூல் ஒன்றினை ஓசைப்படாமல் கொண்டு வந்திருக்கிறார் நண்பர் லட்சுமணன். பிளக்ஸ்... பேனர்... சிறப்பு விருந்தினர்... அழைப்பிதழ்... என ஏக அமர்க்களங்களோடு நாம் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்... அந்தப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில்... அதுவும் அந்தப் பழங்குடி மக்களை வைத்தே வெளியிட வைத்திருக்கிறார் லட்சுமணன். அந்த கவிதை நூலின் பெயர்தான்:ஒடியன்.

கோவை அருகிலுள்ள ஆனைகட்டி பகுதிகளில் வாழ்ந்து வரும் இருளர் பழங்குடி மக்களைப் பற்றிய கவிதை நூல் இது.

1987 வாக்கில் ஆனைகட்டி மலைப்பகுதிகளிலுள்ள தூமனூர், தூவைப்பதி போன்ற பகுதிகளுக்கு நண்பர்களோடு சென்று தெரு நாடகங்கள் போட்டிருக்கிறோம். அதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் மறைந்த என் தோழர்கள் சத்யன், சசி போன்றவர்கள்தான். அதன் பின்னர் ஆதிவாசி மக்களுடனான சந்திப்பு அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போதாவது நிகழ்வதுண்டு. அதனால் அவர்களது மொழி ஓரளவுக்கு பரிச்சயம்தான் எனக்கு. ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய அழிந்துவரும் மொழிகளில் ஒன்றாக அந்த இருளர்களது மொழியும் இருக்கிறது என்பது சமகாலத் துயரங்களுள் ஒன்று.

இந்த வேளையில் பணபலமும், அடியாள் பலமும் கொண்ட நகரமிராண்டிகளால் அம்மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை எழுத்துவடிவம் இல்லாத அவர்களது பேச்சு மொழியிலேயே சொல்லியிருக்கும் விதம் வெகு நயம்.

‘‘அஞ்சு இட்லிகூ

ஆறு ஏக்கரே கொடாத்து

காலேவாயிலே

கல்லு சொமக்கே நா.”இதுதான் அவர்களது மொழிநடை. இதையே நகர வார்த்தைகளில் விளக்குவதானால்...

“ஐந்து இட்லிக்கு

ஆறு ஏக்கர் ஏமாந்து

செங்கல் சூளையில்

கல் சுமக்கிறேன் நான்.”

என்றும் சொல்லலாம் இக்கவிதையை.

இட்லியையே பார்க்காத அந்த ஆதிவாசி மக்களை ஏமாற்றி அவர்களது நிலங்களை நகரவாசிகள் எழுதி வாங்கிய அயோக்கியத்தனங்கள் ஏராளம் இருக்கிறது இந்த மண்ணில். ஒவ்வொரு கவிதையின் கீழேயும் ஆதிவாசி மக்களது மொழிக்கான அர்த்தங்களை அளித்திருக்கிறார் கவிஞர். அத்தோடு நில்லாமல் அதன் அருகிலேயே இருளர் மொழிக் கவிதைகளை நகரவாசிகளுக்கான வார்த்தைகளிலும் படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

வீடு என்பதை அவர்கள் கூரே என்கிறார்கள்.

தாயை அக்கா என்கிறார்கள்.

தந்தையை அம்மே என்றும் தவளையை கப்பே என்றும் அழைக்கிறார்கள் இம்மக்கள்.

கள்ளம் கபடமற்ற இந்தப் பழங்குடி மக்களிடம் எள்ளலும் நையாண்டியும் துள்ளி விளையாடுவதற்கு அடையாளமாய் ஒரு கவிதை...

“ஆதிவாசிக்கு

அற்புதமா திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு

டெண்டரு போடுகே

பேப்பருலே எழுதுகா...

டீவிலே காட்டுகா...

ஊரெல்லாம் பேசுகா...

போட்டா புடிக்கா...

நினாக்கு பெரியாபிசர் பதவீ.

இப்போ

நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே.”

அரசு அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுக்களும் ஆதிவாசிகளுக்கு திட்டங்கள் தீட்டுகிறோம் என்கிற பெயரில் எப்படியெப்படியெல்லாம் தங்களைக் கடன்காரர்கள் ஆக்குகிறார்கள் என்பதை அப்பட்டமாக நக்கலடிக்கும் வரிகள்.

அவர்கள் பேசும் மொழி நமக்கு புதிதாய் இருக்கலாம்। கொஞ்சம் சிரமமாகக்கூட இருக்கலாம். ஆனால் வளர்ச்சியின் பெயராலும்... நாகரிகத்தின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டு வரும் இம்மக்களுக்கு ஏதேனும் நாமும் செய்தாக வேண்டும் என்கிற அக்கறையும் சமூகப் பொறுப்பும் இருந்தால் அந்தச் சிரமம் நம்மை ஒருபோதும் உறுத்தாது. ஆகவே மக்களே... வாசிக்க ஆசையிருப்பின் அழையுங்கள்: 094886 57729. அப்புறம் உங்கபாடு அவுங்கபாடு.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Cont

Footer