September 25, 2010

ஆதிவாசிகளை ஏமாற்றும் நகரவாசிகள் - தமிழக அரசியல் -பாமரன்


அமெரிக்காவில் செவ்விந்தியப் பழங்குடிகள் பட்டபாட்டையும்... மாயன் பழங்குடியினரைப் பற்றியும் மண்டையை உடைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் நம் உள்நாட்டு ஆதிவாசி மக்களைப் பற்றிய கவிதை நூல் ஒன்றினை ஓசைப்படாமல் கொண்டு வந்திருக்கிறார் நண்பர் லட்சுமணன். பிளக்ஸ்... பேனர்... சிறப்பு விருந்தினர்... அழைப்பிதழ்... என ஏக அமர்க்களங்களோடு நாம் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்... அந்தப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில்... அதுவும் அந்தப் பழங்குடி மக்களை வைத்தே வெளியிட வைத்திருக்கிறார் லட்சுமணன். அந்த கவிதை நூலின் பெயர்தான்:ஒடியன்.

கோவை அருகிலுள்ள ஆனைகட்டி பகுதிகளில் வாழ்ந்து வரும் இருளர் பழங்குடி மக்களைப் பற்றிய கவிதை நூல் இது.

1987 வாக்கில் ஆனைகட்டி மலைப்பகுதிகளிலுள்ள தூமனூர், தூவைப்பதி போன்ற பகுதிகளுக்கு நண்பர்களோடு சென்று தெரு நாடகங்கள் போட்டிருக்கிறோம். அதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் மறைந்த என் தோழர்கள் சத்யன், சசி போன்றவர்கள்தான். அதன் பின்னர் ஆதிவாசி மக்களுடனான சந்திப்பு அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போதாவது நிகழ்வதுண்டு. அதனால் அவர்களது மொழி ஓரளவுக்கு பரிச்சயம்தான் எனக்கு. ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய அழிந்துவரும் மொழிகளில் ஒன்றாக அந்த இருளர்களது மொழியும் இருக்கிறது என்பது சமகாலத் துயரங்களுள் ஒன்று.

இந்த வேளையில் பணபலமும், அடியாள் பலமும் கொண்ட நகரமிராண்டிகளால் அம்மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை எழுத்துவடிவம் இல்லாத அவர்களது பேச்சு மொழியிலேயே சொல்லியிருக்கும் விதம் வெகு நயம்.

‘‘அஞ்சு இட்லிகூ

ஆறு ஏக்கரே கொடாத்து

காலேவாயிலே

கல்லு சொமக்கே நா.”இதுதான் அவர்களது மொழிநடை. இதையே நகர வார்த்தைகளில் விளக்குவதானால்...

“ஐந்து இட்லிக்கு

ஆறு ஏக்கர் ஏமாந்து

செங்கல் சூளையில்

கல் சுமக்கிறேன் நான்.”

என்றும் சொல்லலாம் இக்கவிதையை.

இட்லியையே பார்க்காத அந்த ஆதிவாசி மக்களை ஏமாற்றி அவர்களது நிலங்களை நகரவாசிகள் எழுதி வாங்கிய அயோக்கியத்தனங்கள் ஏராளம் இருக்கிறது இந்த மண்ணில். ஒவ்வொரு கவிதையின் கீழேயும் ஆதிவாசி மக்களது மொழிக்கான அர்த்தங்களை அளித்திருக்கிறார் கவிஞர். அத்தோடு நில்லாமல் அதன் அருகிலேயே இருளர் மொழிக் கவிதைகளை நகரவாசிகளுக்கான வார்த்தைகளிலும் படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

வீடு என்பதை அவர்கள் கூரே என்கிறார்கள்.

தாயை அக்கா என்கிறார்கள்.

தந்தையை அம்மே என்றும் தவளையை கப்பே என்றும் அழைக்கிறார்கள் இம்மக்கள்.

கள்ளம் கபடமற்ற இந்தப் பழங்குடி மக்களிடம் எள்ளலும் நையாண்டியும் துள்ளி விளையாடுவதற்கு அடையாளமாய் ஒரு கவிதை...

“ஆதிவாசிக்கு

அற்புதமா திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு

டெண்டரு போடுகே

பேப்பருலே எழுதுகா...

டீவிலே காட்டுகா...

ஊரெல்லாம் பேசுகா...

போட்டா புடிக்கா...

நினாக்கு பெரியாபிசர் பதவீ.

இப்போ

நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே.”

அரசு அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுக்களும் ஆதிவாசிகளுக்கு திட்டங்கள் தீட்டுகிறோம் என்கிற பெயரில் எப்படியெப்படியெல்லாம் தங்களைக் கடன்காரர்கள் ஆக்குகிறார்கள் என்பதை அப்பட்டமாக நக்கலடிக்கும் வரிகள்.

அவர்கள் பேசும் மொழி நமக்கு புதிதாய் இருக்கலாம்। கொஞ்சம் சிரமமாகக்கூட இருக்கலாம். ஆனால் வளர்ச்சியின் பெயராலும்... நாகரிகத்தின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டு வரும் இம்மக்களுக்கு ஏதேனும் நாமும் செய்தாக வேண்டும் என்கிற அக்கறையும் சமூகப் பொறுப்பும் இருந்தால் அந்தச் சிரமம் நம்மை ஒருபோதும் உறுத்தாது. ஆகவே மக்களே... வாசிக்க ஆசையிருப்பின் அழையுங்கள்: 094886 57729. அப்புறம் உங்கபாடு அவுங்கபாடு.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Cont

No comments:

Post a Comment

Footer