July 18, 2010

பிரேமானந்- ஒரு மாபெரும் சகாப்தத்தின் மறைவு -இரா முருகவேள்



இன்று பிரேமானந்தின் அறிவியல் முறைமை அருங்காட்சி யகத்தின் துவக்கவிழா. இந்த நாளுக்காகத்தான் அவர் நீண்ட நாட்களாக உழைத்து வந்தார். ஆனால் அதற்கு முன்தினம் தான் அவருக்கு உற்ற நண்பராகவும், தோழராகவும் இருந்து வந்த அவரது சகோதரர் தயானந்த் மரணமடைந்திருந்தார். எனவே விழா தள்ளிப் போயிருக்கும் என்று நினைத்திருந் தேன். ஏன் வரவில்லை என்று பிரேமானந்திடமிருந்து போன். டவுன்ஹால், உக்கடத்தின் நெரிசல், இரைச்சல் எல்லாவற்றை யும் கடந்து சென்றதே நினைவில்லை.



சொந்த சகோதரனுக்காக இந்த விழாவை இரண்டுநாள் தள்ளி வைத்தாலென்ன? திருமணம் முடிந்து நேராக டூட்டிக்குப் போனேன் என்று சொல்லும் தொழில் வெறி பிடித்தவர்கள் மீது வழக்கமாக ஏற்படும் எரிச்சல், பிரேமானந்தின் மீதும் தோன்றியது. வாழ்நாள் எல்லாம் முற்றும் துறந்த ஞானி களைக் கிண்டலடித்துக் கிண்டலடித்து பிரேமானந்தே இப்படி ஒரு ஞானியாகி விட்டாரோ என்று தோன்றியது.


அருங்காட்சியகத்தின் முன் நடுநாயமாக பிரேமானந்த் உட் கார்ந்திருந்தார். ஒரு விபத்தில் பற்கள் உடைந்து போனதால் பல்செட் பொருத்தியிருந்தார். ஒழுங்கான வரிசைப் பற்கள் தெரிய சிரித்தபடி வரவேற்றார். அடர்ந்த வெண்ணிற தாடிக் குள் சிரிக்கும் போது கவர்ச்சிகரமாகத் தோன்றினார்.


விழா தள்ளிப் போயிருக்கும் என்று நினைத்தேன் என்றேன். அவர் திரும்பவும் சிரித்தார். ஏன், நீ சாகமாட்டாயா?


அந்த நேரத்தில் பிரேமானந்தும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டுதான் இருந்தார். குடல் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தது. அதிகபட்சம் ஆறுமாதம் என்று அவரே சொல்லிக் கொண்டிருந்தார். எனவே ஒவ்வொருநாளும் முக்கியமென்று அவர் எண்ணியிருந்திருக்கலாம்.


***
04.10.2009 அன்று மாலை பிரேமானந்த் மரணமடைந்தார். அன்று காலை ஏறக்குறைய அரை மயக்க நிலையில் இருந்த போது தோழர் விஜயகுமாரை அழைத்து மரணத்திற்குப் பின் தன் உடலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்ப டைப்பதற்கான ஆவணங்களில் ரேகை வைத்தார். அவரால் கையெழுத்திட முடியவில்லை. பிரேமானந்த் வாழ்நாளெல்லாம் மூடநம்பிக்கைகளுக்கும் மத பீடங்களுக்கும் எதிராக சமரசமின்றி போராடினார்.குறிப்பிடத் தக்க வெற்றிகளையும் ஈட்டினார். ஆனால் டாக்டர் கோவூரிட மிருந்து தான் பெற்ற களம் முழுவதும் வெல்லப்படவில்லை என்பது அவரக்குத் தெரிந்தே இருந்தது.


பிரேமானந்த் பற்றி சஜீவ் அந்திகாட் எடுத்த ஆவணப்படம் (Miracle Hunters) இப்படித் தொடங்குகிறது: பிரேமானந்த் ஆகிய நான் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட அற்புதங்களை யாராவது நிகழ்த்திக் காட்டினால் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தரத் தயாராக இருக்கிறேன். இந்த சவாலை முதலில் விடுத்தவர் டாக்டர் கோவூர். அவர் இறந்து ஓராண்டு கழித்து பிரேமானந்த் அதைத் தொடர்ந்தார்.


கோவூரின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட சாமியார் களின் தூக்கத்தை பிரேமானந்த் குலைத்தார் என்பதையே அந்தக் காட்சி விளக்குகிறது. சற்றே நாடகபாணியில் இருந் தாலும் இதிலிருந்த கம்பீரம் வசீகரிக்கத்தான் செய்கிறது.
*** பிரேமானந்த் கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு வைதீகமான கொங்கணி பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஏழா வது படித்துக்கொண்டிருந்த பிரேமானந்த், வகுப்பறையில் காந்தியின் படத்தை வைத்ததற்காக பள்ளியில் இருந்து வெளி யேற்றப்பட்டார். பள்ளிக்கல்வி இல்லாததாலோ என்னவோ சுயமாக புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினார்.


பதினெட்டு வயதில் ஒரு துறவி தான் ஒரு பைசாகூட இல்லா மல் இந்தியா முழுவதும் பயணம் செய்ததாகவும் தனது தேவைகள் அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டதாக வும் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு தானும் அதுபோலப் புறப்பட்டார். கடவுளைக் காண்பதுதான் அவருடைய நோக்க மாக இருந்தது. பணமில்லாமல் சென்றதால் அவர் மடாலயங் களிலும், கோவில்களிலும் தங்க வேண்டியிருந்தது. அந்த இடங்களிலெல்லாம் அற்புதங்கள் நிகழ்த்தப்படுவதைப் பார்த்து தானும் அவ்வாறு நிகழ்த்தும் நிலைக்கு உயர்ந்தால் ஒருநாள் இறைவனைக் கண்டுவிடலாம் என்று நம்பி ஆர்வத்துடன் யோகா, தியானம் போன்றவற்றில் இறங்கினார். கடவுளைத் தேடிய பயணம் தவிர்க்க இயலாத விதத்தில் காசிக்கு அவரைக் கொண்டுவந்து சேர்த்தது. பிரம்மச்சரியம் உன்னதமானது என்று கற்றுக் கொடுத்த குரு ஒருநாள் ஒரு பெண்ணோடு ஏடாகூடமாக இருப்பதைப் பார்த்துவிட்ட பிரேமானந்த் மடத்திலிருந்து வெளியேறினார். பிறகு இன்னொரு குரு, அப்புறம் இன்னொரு குரு... கடவுள் நம்பிக்கையும் யோக சாதகங்களின் மீதான நம்பிக்கையும் முற்றிலும் அற்றுப்போக அவர் சுத்த நாத்திகராக மாறினார். கடவுளைத் தேடும் இப்பயணத்தில் 1500 வித்தைகளை, அதாவது அற்புதங்கள் நிகழ்த்தும் முறைகளைக் கற்று அத் துறையில் நிபுணராகிவிட்டார். கேரளா திரும்பி வந்தவருக்கு தீ மிதிக்கத் தெரிந்திருந்தது, கொதிக்கும் இரும்பைக் கடிக்க வும் அதுபோன்ற இன்னும் பலவித்தைகளை நிகழ்த்திக் காட் டவும் தெரிந்திருந்தது. இவற்றிற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அவர் உரக்கப் பேசத் தொடங்கினார்.


அந்த நேரத்தில் கேரளப் பகுத்தறிவாளர் கழகம் (கேரள யுக்திவாதி சங்கம்) கேரளாவில் இயங்கி வந்தது. பிரேமானந் தும், தயானந்தும் அவற்றில் உறுப்பினராயினர். பின்பு பிரேமானந்த் அதன் தலைவராக உயர்ந்தார்.
தமிழகம் தவிர்த்த மற்ற பகுதிகளில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பல்வேறு பகுத்தறிவாளர் கழகங்கள் இயங்கி வந்தன. மூடநம்பிக்கைகளை, கடவுள் பெயரால் செய்யப்படும் மோசடிகளை அம்பலப்படுத்துவது, அவற்றிற்கு விஞ்ஞானப் பூர்வமாக விளக்கங்கள் அளிப்பது என்ற நோக்கங்களோடு இந்த பகுத்தறிவாளர் கழகங்கள் இயங்கி வந்தன. தமிழகத் தில் மட்டும் திராவிடர் கழகம், மக்கள் திரள் அமைப்புகள் பார்ப்பனீய எதிர்ப்பு போன்றவற்றோடு விரிவான தளத்தில் இயங்கி வந்தது.


இலங்கைப் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கோவூர் இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கி வந்த பகுத்தறிவாளர் கழகங்களால் அடிக்கடி சிறப்பு விருந்தி னராக அழைக்கப்பட்டார். அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டு மாறு கோவூர் விடுத்த சவால் பகுத்தறிவாளர்களின் நம்பிக் கைக்கும், செயல்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருந்தது.


பல்வேறு காரணங்களினால் கேரளத்தை விட்டு வெளியேறிய பிரேமானந்த் ஜி.டி.நாயுடுவின் அழைப்பின் பேரில் கோவை யில் குடியேறினார். கோவூர் அப்பொழுது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.


கோவூரின் கூட்டங்கள் பெரும்பாலும் அறைக்கூட்டங்களாகத் தான் நடைபெறும். சிறு கட்டணங்கள் கூட வசூலிக்கப்படும். இது சரியல்ல, இன்னும் விரிவான தளத்தில் சென்றிருக்க வேண்டும் என்று கோவூர் தனது இறுதிக்காலத்தில் நினைத்த தாக பிரேமானந்த் கூறுகிறார். கோவூர் பிரேமானந்திடம் மக்களிடம் செல்லுமாறும் பணம் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். பிரேமானந்தின் வாழ்க்கை முற்றி லும் மாறிப்போனது. அவர் நாடு முழுவதும் பயணம் செய்து பகுத்தறிவாளர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம், அற்புதம் பற்றிய செயல்முறை விளக் கங்கள் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். பலருக்குப் பயிற்சியளித்தார்.


அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது இரண்டு மாநிலங்கள். ஆந்திராவில் அப்போது இந்தியப் பொதுவுட மைக் கட்சி (மக்கள் யுத்தம்)யாக இருந்த மாவோயிஸ்ட் கட்சி யின் முன்னணி அமைப்புகள் அவரை கிராமம் கிராமமாக அழைத்துச் சென்றன. பிரேமானந்த் கத்தாருடன் இணைந்து பலநாட்கள் ஆந்திர கிராமப்புறங்களில் பயணம் செய்தார்.


தமிழகத்தில் வீரமணி தலைமையில் இருந்த திராவிடர் கழகத் திலிருந்து பிரிந்த இராமகிருஷ்ணன் தி.க.(இப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம்) பிரேமானந்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது. இவர்களது மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த செயல்முறை விளக்கங் களோடு அற்புதங்கள் எப்படி நிகழ்த்தப்படுகின்றன என்பது பற்றி பிரேமானந்த் தி.க. தோழர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். அவர் நடத்திய மந்திரமா? தந்தி ரமா? நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறுவர்களாக கலந்துகொண்ட வர்கள் அது ஏற்படுத்திய பிரமிப்புக் குறித்து இன்றும் பேசுகி றார்கள். அவரது ஜீப்பில் வந்து அவரது பொருட்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு எந்த செலவுக்கும் ஒரு பைசாவும் வாங்காமல் திரும்பிச் சென்ற பிரேமானந்த் இன்றும் வாஞ்சையோடு நினைவுகூரப்படுகிறார்.


கோவை வீரகேரளத்தில் இராமகிருஷ்ணன் தி.க ஒரு தீமிதி விழாவை நடத்தியது. மா.லெ. ஆதரவாளர்களாக அப்போதி ருந்த நாங்கள் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றிருந்தோம். தீ மிதிக்கப் பரப்பப்பட்ட கங்குகளிலிருந்து தணல் வீசிக் கொண் டிருந்தது. செக்கச் சிவந்த நெருப்பைப் பார்க்க கொஞ்சம் பய மாகத்தானிருந்தது. தி.க.வினர் ஏதோ திருமண விழாவைப் போல குதூகலத்துடன் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்த னர். தீமிதிக்கும் நேரம் வந்தது.


முதலில் ஒரு தோழர் இறங்கினார். அப்புறம் இன்னொருவர் . பிறகு இன்னொருவர்... மேடையில் ஒரு பிராணி, தோழர்கள் ஒருமுறை தீயில் இறங்கினால் போதும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற மைக் தமிழில் அலறிக் கொண் டிருந்தது. சிகரெட்டுக்கு நெருப்புக் கேட்க எங்கள் பக்கம் ஒதுங்கிய ஒரு உருவத்தின் உடலில் கொக்கிகள் மாட்டப்பட்டு அவற்றில் எலுமிச்சை பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.


பலமணி நேரப் பேச்சைவிட ஒரு நிமிட செயல் சரியான பலனைத்தரும் என்பது பிரேமானந்த்தின் கருத்து. இது எவ்வளவு தூரம் சென்றிருக்கும். வெறும் மூடநம்பிக்கை எதிர்ப்பிற்கு தமிழக அரசியலில் எவ்வளவு தூரம் இடம் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உரியது.


1983ல் இலங்கைத் தமிழர் படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட முதல் எழுச்சிக்குப் பின்பு தி.க.வின் செயல்பாடுகள் மாறிப்போயின. அன்று தி.க.அலுவலகங்களில் பார்க்க நேரிட்ட புலிகளின் ஆர்வம் ததும்பும் இளம் முகங்களை இப்போது நினைத்தால் சுரீர் என்கிறது. 1983க்குப் பின்பும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தன. முன்பு குறிப்பிட்ட வீரகேரளம் நிகழ்ச்சிகூட பின்பு நடந்ததுதான். ராமகிருஷ்ணன் தி.கவின் தொடர்பால் அவருக்கு விடுதலைப் புலிகள் சிலரிடமும் அறி முகம் ஏற்பட்டது. அவர் புலிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்தார். அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போரா டும் எல்லோரிடமும் காட்டும் வழக்கமான அன்புடன்தான் அவர் புலிகளிடமும் நடந்துகொண்டார்.


ஆனால் ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு ராமகிருஷ்ணன் தி.க.வேட்டையாடப்பட்டது. ராமகிருஷ்ணனும் ஆறுச்சாமி யுமே மூன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். சாந்தகுமார் போன்ற இளைஞர்கள் அடக்குமுறைகள், கைதுகள், நிழலாகப் பின்தொடரும் க்யூ பிரிவு போலீசார் எல்லாவற்றிற் கும் நடுவே தொடர்ந்து இயங்கினர். ஈழ ஆதரவாளர்கள் தமிழகத்தில் புரிந்த தியாகங்கள் குறித்து சரியான ஒரு ஆவ ணம் கூடத் தமிழில் இல்லை என்பது வேதனையான ஒன்று.


சிறைப்பட்டவர்களை மீட்பதும், தங்களைக் காப்பாற்றிக்கொள் வதும் அன்றாட வாழ்க்கையான பிறகு மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகள் நின்றே போயின. ஆந்திராவிலும் மக்கள்யுத்தக் கட்சியின் மீதான அடக்குமுறை தொடர் பிரச்சாரத்திற்கு ஏது வானதாக இல்லை. ஆந்திராவில் தான் விரிவாகப் பயணம் மேற்கொண்டபோது மக்கள்யுத்தக் கட்சியின் பல்வேறு மக்கள்திரள் அமைப்புகளின் உறுப்பினர்கள் தாமாக முன் வந்து தனது நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு அளித்ததையும், தனது பயணங்களில் தன்னிச்சையாக இணைந்துகொண்டதை யும் பிரேமானந்த் இறுதிவரை நினைவில் வைத்திருந்தார். பல் வேறு பேட்டிகளில் பதிவு செய்யவும் செய்தார். பிரேமானந் தின் செயல்பாடுகளில் ஒரு கணிசமான பகுதி சத்யசாயி பாபாவை அம்பலப்படுத்துவதில் கழிந்தது. அதன் காரணமா கவே திரும்பவும் ஆந்திரா முழுவதும் பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு நீண்டநாட்க ளாக இருந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆதரவு கூலிப்படையினரால் கத்தார் சுடப்பட்டதும் அது இறுதியாக முறிந்துபோனது.


***
பிரேமானந்த் ஒத்த கருத்துடைய இயங்கங்களோடு இணைந்து செயல்படுவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் அந்த அமைப்புகளில் உறுப்பினராகி இணைந்ததில்லை. அவர் உறுப்பினராக இருந்தவை இறுக்கம் தளர்வான அமைப்புகள் ஒரு தலைமையையோ கட்சி போன்ற அமைப்பு வடிவத்தையோ ஏற்றுக்கொள்ளாதவை இந்த அமைப்புகள். பெரும்பாலும் அறிவுஜீவிகள் ஆதிக்கம் செலுத்தியவை யாகவும், அவர்கள் மட்டத்தில் இயங்கியவையாகவும் மட்டுமே இந்தப் பகுத்தறிவாளர் கழகங்கள் இருந்தன.


இதை பிரேமானந்த் போன்றவர்கள் ஒரு குறையாக உணர்ந் திருந்தனர். ஆனாலும்கூட அவரைப் போன்றவர்கள் எந்த அமைப்பிற்குள்ளும் போகும் மனநிலை கொண்டிருக்க வில்லை. இலகுவாக உடன் பயணிக்கும் போக்கும் அமைப்பு களுக்கு இல்லை. ஆளும் வர்க்கங்களுக்கும் மதபீடங்களுக் கும் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் சாமியார்களுக்கும் இடை யேயுள்ள தொடர்பு குறித்து பிரேமானந்த் போன்றவர்கள் நேரடியாக அனுபவரீதியாக அறிந்திருந்தாலும் மூடநம்பிக்கை களுக்கு எதிரான போராட்டங்களை அநீதியான சமூக அமைப்பிற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க முயற்சி செய்யவில்லை. உலகை மாற்றிய பதினாறு விஞ்ஞானிகளில் மார்க்ஸையும், ஏங்கெல்ஸையும் பிரேமானந்த் குறிப்பிடுகிறார். இயக்கவியல் பொருள்முதல்வாதம் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு என்கிறார். அதேபோல் மிகப்பெரிய மக்கள் திரளினருக்கு நன்மை அளித்தவர் லெனின் என்றார் அவர். ஆனால் ஒரு நாளும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவர் உறுப்பினராக இருந்ததேயில்லை. அவர் விரும்பியதெல்லாம் தன் பயணத்தை ஆக்கிரமிக்காத இறுக்கம் தளர்வான அமைப்புகளையே.


பிரேமானந்த் பி.யு.சி.எல்- ல் கூட உறுப்பினராயிருந்ததாக சொல்லிக் கொள்வார். ஆனால் ஒருநாளும் அவரை எந்த பி.யு.சி.எல் கூட்டத்திலும் பார்த்ததில்லை. பெரிசு இரும்பைக் கடிக்கும். தீயை மிதிக்கும் கமிட்டி, கிமிட்டி என்றால் எஸ்கேப் ஆகிவிடும் என்று கிண்டலாகச் சொல்வார்கள். உள்ளூர் அமைப்பு தொடர்பாக யாராவது பேச்செடுத்தால் தார்குண்டே லெவலில் பிரேமானந்த் பேசி பீதியூட்டிவிடுவார். எனவே ஜவான்ஸ் பவன்முன் 30 போலிசார் நடுவே 20 பேர் நடத்தும் எந்த ஆர்ப்பாட்டத்திலும் அவர் தலையைக் காட்டியதே இல்லை. தான் முன்னேறிச் செல்லச்செல்ல தான் உருவாக்கிய அமைப்புகள் கலைந்துகொண்டே வருவதையும் அவர் பார்க்கத்தான் செய்தார். பார்ப்பனீய எதிர்ப்போடு மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கியதுதான் பெரியாரின் வெற்றி என்று அவர் தனிப்பட்ட உரையாடல்களின்போது கூறியதாக விஜயகுமார் கூறுகிறார்.


தனி மனிதர்களுக்கு பகுத்தறிவு ஊட்டுதல், சாமியார்களின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துதல் போன்றவை மட்டுமே விரிவான வலைப்பின்னலும் ஆழமான வேர்களும் கொண்ட பிற்போக்குவாதிகளை முறியடிக்கப் போதுமானவை அல்ல என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். மக்களைத் திரட்டி இந்த பிற்போக்காளர்கள்மீது தாக்குதல் தொடுத்து அவர்களை முறியடிப்பதற்கு மாற்றாகி இந்தப் பிரச்சினைக்கு பிரேமானந்த் தனக்குகந்த விதத்தில் ஒரு மாற்றை முன் வைத்தார்.


அதுதான் கல்விச் சீர்திருத்தம். இப்போதுள்ள கல்விமுறை கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்குவதில்லை. உத்தர வுகளுக்குக் கீழ்ப்படிபவர்களைத்தான் உருவாக்குகிறது. எனவேதான் சர்வ வல்லமை வாய்ந்த மதவாதிகள் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தி தாக்குதல் தொடுக்கும்போது கேள்வி கேட்கப் பழக்கப்படுத்தப்படாத மக்கள் எளிதில் பலி யாகிப் போகிறார்கள் என்றார் பிரேமானந்த். அவர் கல்விச் சீர்திருத்தம் குறித்து மிக விரிவாக பேசியும் எழுதியும் வந்துள் ளார். சொல்லித் தருவதை நிறுத்து, கற்றுக்கொள்வதைத் தொடங்கு என்பதுதான் பிரேமானந்த் முன்வைத்த முழக்கம். கேள்வி கேட்பதற்கும், சுதந்திரமாக சிந்திப்பதற்கும் குழந்தை யிலிருந்தே கற்றுக் கொடுப்பதன் மூலம் மூடநம்பிக்கை களுக்கு ஆட்படாத, அடிமைப்புத்தி இல்லாத மனிதர்களை உருவாக்கிவிடலாம் என்று அவர் எண்ணினார். அப்படி ஒரு கல்விமுறையை உருவாக்குவதற்கு மக்களைத் திரட்டி போராட வேண்டிய அவசியம் இருந்ததால்தான் இந்த முழக்கம் வலுப்பெறவில்லை.


ஆனால் பிரேமானந்த் ஒரு உறுதி வாய்ந்த அமைப்பையோ, கட்சியையோ கட்டாதது அப்படி ஒன்றும் பெரிய குறை போலத் தோன்றவில்லை. அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் கள் பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டனர். பொதுவுடமை யாளர்களாகவும், தலித்வாதிகளாகவும், மனித உரிமை ஆர்வலர்களாகவும், சுத்தமான பகுத்தறிவுவாதிகளாகவும் உருவாகினர். எதிர்கால சமூகத்திற்கு நம்பிக்கையாக இருப்ப வர்கள் இவர்கள்தான். இத்தகையவர்கள் தங்களின் பதின்ம வயதுகளில் கடவுள் தொடர்பான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொண்டபோது புன்சிரிப்போடு எதிரில் நின்றது பிரேமா னந்த் உருவம். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி இந்த சிக் கலைத் கடந்துவர உதவியது பிரேமானந்தின் பணி. ஒரு வேளை அவர் ஒரு அமைப்பு தொடங்கி தலைவராகவும் ஆகியிருந்தால் இந்தியச் சூழலில் கடவுளுக்கு பதில் அவர் அந்த இடத்தை ஆக்கிரமித்திருப்பார்.


***
ஒரு வேடிக்கை என்னவென்றால் சாதாரண அமைப்பு வடி வங்களுக்குள்கூட வர விரும்பாத அவரைச் சுற்றி இருந்த வர்கள் பெரும்பாலும் புலி ஆதரவாளர்கள் என தி.க.வின ரும், மா.லெ.கட்சிகளின் ஆதரவாளர்கள்தான். ராஜீவ்காந்தி யின் கொலை குறித்து அவர் புலிகளுக்கு எதிரான கருத் தையே கொண்டிருந்தார். கொல்வதன் மூலம் பேசுவதற்கான வாய்ப்புகளை அடைப்பது தவறு என்ற எண்ணம் கொண்டி ருந்தார் அவர். சிந்தித்துப் பார்க்கும் போது தவறு பிரேமா னந்த் பக்கம் இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ் தெரியாத வர்களுக்கு தங்கள் நியாயங்களை வலியுறுத்தி மற்ற மொழி களில் வெளியீடுகளைக் கொண்டுவர புலிகள் எடுத்த முயற்சி மிகமிக அற்பமானதுதான். இந்தியாவில் மிக முக்கியமான அறிவுஜீவிகளை எல்லா தேசிய இனப் போராட்டங்களுக்கும் எதிரான ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலமாகவே அரசி யல் நிகழ்வுகளை அறிந்து கொள்ளக்கூடியவர்களாக விட்டு வைத்தது புலிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் செய்த தவறு. அதேநேரத்தில் யாரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒரு துருப்பிடித்த பிளேடைக்கூட எடுக்கக்கூடாது என்றெல்லாம் மக்களுக்கு நீதிபோதனை செய்யும் இடத்தில் அவர் தம்மை இருத்திக் கொண்டதில்லை. வர்கீஸின் போராட்டம் நடந்த காலத்தில் வயநாட்டில் ஒரு கொடுமைக்கார பண்ணையார் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதையே தொழி லாகக் கொண்டிருந்தவரை நக்ஸல்பாரி இயக்கத்தை சேர்ந்த ஒரு பழங்குடி இளைஞன் கொன்றபோது பண்ணையார் அதிர்ஷ்டம் செய்தவர், சில நிமிடங்களில் செத்துப்போனார் என்றார். பின்பு ஒருபடி மேலே சென்று அத்தகைய கொடியவர்களை ஊனமாக்கி நடமாடவிடவேண்டும். நானாக இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் என்றார்.


70களில் பிரேமானந்த் குடும்பம் கோட்டயம் தாலுகாவில் ஒரு கல்லூரி அமைக்கத் தன் நிலங்களை தானமாகக் கொடுத்தது. எல்லா ஆவணங்களும் கையெழுத்தாகி பலநாட்கள் கழித்து தான் தெரிந்தது கல்லூரி அமைக்கப்போவது சாய்பாபா டிரஸ்ட் மூலமாக என்று. பிரேமானந்த் கோபமடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக பேசவும் எழுதவும் செய்தார். அரசிடமிருந்து அவருக்கு தொடர்ந்து நெருக்குதல்கள் வந் தன. அவர் ஒரு நக்ஸலைட் என்றும் கூடக் குற்றம் சாட்டப் பட்டார். அதனால்தான் யார் இந்த நக்ஸலைட்டுகள் என்று தேடத் தொடங்கியதாக ஒரு பேட்டியில் கூறுகிறார்.


ஆயுதப்போராட்டமாக இருந்தாலும் சரி வேறெந்தப் போராட் டமாக இருந்தாலும் சரி அது மக்களின் தேவையிலிருந்தே பிறக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து. சாகசவாதம் அவருக்கு ஒருநாளும் கிளர்ச்சியூட்டியதில்லை.அவரது மிக நெருங்கிய நண்பரான ஒரு தோழர் போர்க்கலை நிபுணர். சிறு வயதில் தீபாவளிக்கு கேப் வெடித்ததோடு அவருக்கும் ஆயு தங்களுக்கும் உள்ள உறவு முறிந்து போயிருந்தாலும் போர், உளவு, போன்றவை தொடர்பான புத்தகங்கள்தான் அவருக்கு உயிர். அவருக்கு இந்தியாவில் கிடைக்காத மொசாத், சி.ஐ.ஏ பற்றிய புத்தகங்களை பிரேமானந்தான் அமெரிக்காவிலிருந்து தருவித்துத் தருவார். ஒருநாள் தோழருக்கு புத்தகங்கள் மட் டுமே வாங்கித் தருகிறிர்களே ஏன் ஒரு கன் (gun) வாங்கித் தரக்கூடாது என்று விளையாட்டாகக் கேட்கப்பட்டது. அவரிடம்தான் கன் இருக்கிறதே


***
பிரேமானந்தின் செயல்பாட்டில் பெரும்பகுதி புட்டபர்த்தி சத்ய சாயிபாபாவை அம்பலப்படுத்துவதில் கழிந்தது. ஒஷோ போன்ற நவீன ஆன்மிகவாதிகள் முன்னுக்கு வராத 70களி லும் 80களிலும் சாய்பாபாவும், ஆகாயத்தில் பறக்கும் மகேஷ் யோகியுமே இந்திய ஆன்மீக உலகின் முடிசூடா மன்னர் களாக இருந்தனர். எனவே இவர்களைப் பற்றிய ஆய்வுக்கு பிரேமானந்த்தும் மற்ற பகுத்தறிவுவாதிகளும் அதிக நேரம் ஒதுக்கினர். இந்த இருவர் செய்வதும் வெறும் ஏமாற்று வித்தைகள் தவிர வேறல்ல என்று பிரேமானந்த் ஆயிரம் முறை நிரூபித்துக் காட்டினார்.


ஒருபுறம் சத்ய சாய்பாபா கடவுளாக வணங்கப்பட்டாலும் மற்றொருபுறம் காமெடியன் போலாகிவிட்டதற்குப் பிரதான காரணம் பிரேமானந்த்தான். பல முற்போக்கு இயக்கங்கள் சாய்பாபாவுக்கு எதிராக பல இயக்கங்கள் எடுத்திருந்தாலும் அவற்றிற்கு மூலகாரணமாக இருந்தவை பிரேமானந்த்தின் ஆய்வுகள்தான். பலமுறை சாய்பாபா சித்துவேலை செய்யும் போது கையும் களவுமாகப் பிடிபட்டார். ஒவ்வொருமுறையும் பலம் வாய்ந்த மனிதர்கள் தலையிட்டு எதிர்ப்பை நசுக்கி பாபாவின் தெய்வீகத்தைக் காத்தனர். சாய்பாபா ஆசிரமத்தில் நடந்த கொலைகளை ஆராய்ந்து பிரேமானந்த் அற்புதமான இரண்டு நூல்களை (Lure of Miracles, Murders in Saibaba's bedroom) எழுதியுள்ளார். தன்யா தத்தா என்ற ஆவணப்படத் தயாரிப்பாளர் சேனல் 4க்காக சாய்பாபாவின் மோசடிகளை விளக்கி ஒரு படம் எடுத்தார். அதன் பின்பு அமெரிக்கா போகக்கூடாத இடங்களின் பட்டியலில் சாய்பாபா ஆசிரமத்தையும் சேர்த்துவிட்டது. ஐரோப்பாவிலிருந்து பணம் வருவதும் பெருமளவு தடுக்கப்பட்டுவிட்டது.


மகேஷ் யோகியைப் பொறுத்தவரை அவரது தனித்தன்மை ஆகாயத்தில் பறப்பது. ஒருமுறை அவர் டெல்லியில் இருக்கும்போது மக்கள் முன்னிலையில் ஆகாயத்தில் பறந்து செல்லப்போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார் பெருங் கூட்டம் கூடியது. மகேஷ்யோகி திடீரென்று பறப்பதற்கு பதில் பல்டியடித்து தான் வித்தைக்காரனல்ல, இருபதாயிரம் ரூபாய் தந்தால்தான் பறக்கமுடியும் என்று கூறிவிட்டார். இது நடந்தது எழுபதுகளில். அன்றைய வேடிக்கை அவ்வளவுதான் என்று கூட்டம் கலைந்து சென்றது.


பிரேமானந்த் மறுநாள் யோகியின் இருப்பிடத்திற்குச் சென்று 20,000 ரூபாயை நீட்டி அதைப் பெற்றுக் கொண்டு பறந்து காட்டும்படி கோரினார். கடுப்பான யோகியின் சீடர்கள் பிரே மானந்த்தைத் தூக்கி வெளியே வீசினார்கள். பி.பி.சி இந்திய சாமியார்கள் குறித்து எடுத்த ஆவணப்படங்களில் முக்கியமா னது Lagitation. அதாவது பறப்பது சாத்தியமா? என்பதாகும். அதில் பிரேமானந்தே தோன்றியிருப்பார். அதில் சாமியார்கள் அந்தரத்தில் மிதப்பதாக மக்களை நம்பச் செய்யும் மோச டியை அம்பலபடுத்தி, புவியீர்ப்பு விசையைத் தோற்கடித்து ஒருவர் மேலெழும்பினார் அவர் ஓரிடத்தில் நிற்காமல் மிதந்து அண்ட வெளியில் சென்றுவிடுவார். எனவே மனிதன் மிதப் பது, பறப்பது சாத்தியமே இல்லை என்று விளக்கியிருப்பார்.


சாய்பாபா, மகேஷ் யோகி போன்றவர்களின் புரட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் காட்டிய அக்கறையை சங்கராச்சாரி போன்றவர்களை அம்பலப்படுத்த ஏன் காட்ட வில்லை என்ற கேள்வி அடிக்கடி பிரேமானந்திடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்கென்ன அவசியம்? சங்கராச்சாரிதான் தமிழகப் பகுத்தறிவாளர்களால் போதுமான அளவு அம்பலப் படுத்தப்பட்டுவிட்டாரே என்று பதிலளித்தார் அவர். சரிதான். ஆனால் சங்கராச்சாரி போன்றவர்களை அம்பலப்படுத்த பிரேமானந்தின் நிபுணத்துவம் தேவையில்லை. அரசியல் பொருளாதார அறிவுதான் தேவை. ஆளும் வர்க்கம், அது இயங்கும் விதம், அதன் தொடர்புகள் பற்றிய புரிதல் இருந் தால்தான் இந்த வர்க்கத்திற்கு ஏன் சங்கராச்சாரி தேவை, அவர் எதற்கு எப்படியெல்லாம் சேவை செய்கிறார் என்பதை யெல்லாம் அறிந்து கொள்ள முடியும். இது நிச்சயம் பிரேமானந்தின் துறையல்ல.


***
இக்கட்டுரையின் முற்பகுதியில் கூறியபடி பிரேமானந்த் தொடர்பு கொண்டிருந்த இயக்கங்கள் நெருக்கடிக்குள்ளான போது களப்பணியைத் தொடர்வதில் அவருக்குச் சிக்கல் ஏற்பட்டது. இது 1990களின் தொடக்கத்தில் நடந்தது. இந்த நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து அவருக்கு உதவி கிடைத்தது.


வெளிநாட்டு ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் அதிசயங்கள் நிகழ்த்தும் சாமியார்கள் பற்றிப் படமெடுக்க இந்தியா வந்து குவிந்தனர். அவர்களுக்கும் ஒரு நெருக்டி இருந்தது. இந்திய சாமியார்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆடிய ஆட்டம் அப்படியானது. வெள்ளைக்கார மோகம் கொண்ட இந்தியர்களின் எண் ணிக்கை, கறுப்பு சாமியார்களை நாடிவரும் வெள்ளைக்காரர் களின் எண்ணிக்கையைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகம். ஆனால் பின்னதற்கு ஊடகங்கள் மிகப்பெரிய முக்கியத்து வம் அளித்தன. இந்த ஊடகவியலாளர்களின் தேடல் தவிர்க்கவியலாதவிதத்தில் பிரேமானந்திடம் வந்து முடிந்தது.


பிரேமானந்தின் உதவியோடு பல நல்ல ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன. பி.பி.சிக்காக ஆவணப்படங்கள் எடுத்து வந்த பலர் அவரது நெருங்கிய நண்பர்களானார்கள். ஆனால் பிரேமானந்த் ஒருநாளும் ஊடகங்களின் கைப்பாவையாக மாறிவிடவில்லை. இந்தியாவில் செய்து காட்டப்படும் கண் கட்டு வித்தைகளிலேயே மிகவும் சிறப்பானதாகக் கருதப்படு வது ஒரு சாதாரண கயிற்றை கம்பிபோல எழுந்து நிற்கச் செய்யும் வித்தையாகும். இது தி கிரேட் இன்டியன் ரோப் டிரிக் என்று அழைக்கப்படுகிறது. இது எப்படி செய்யப்படுகி றது என்று ஒரு ஆவணப்படம் எடுக்க பி.பி.சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவர் விரும்பினார். வழக்கம்போல பிரேமானந்த்தை அணுகினார்கள்.


பிரேமானந்த் உறுதியாக மறுத்துவிட்டார். மூடநம்பிக்கைகளை யும் கடவுள் செயல் என்று சொல்லி செய்யப்படும் மோசடி களையும் அம்பலப்படுத்துவதே தனது பணி. இந்த கயிறு நிற் கும் வித்தை மேஜிக் நிபுணர்கள் மாயமில்லை மந்திரமில்லை என்று சொல்லியே செய்து காட்டுவது. மேஜிக் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினரான தன்னால் அதன் ரகசியங்களை வெளியே சொல்லமுடியாது என்று கூறிவிட்டார். இதன் காரணமாக அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் உரசல் ஏற்பட்டது என்றாலும் பிரேமானந்த் அசைந்து கொடுக்கவில்லை.


***
பிரேமானந்த் மீது மிக முக்கியமான ஒரு குற்றச்சாட்டு கூறப் படுகிறது. அவர் புதிதாக உருவாகிவந்த நவீன ஆன்மீகவாதி களான ஓஷோ, ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற வர்கள் குறித்து போதுமான அக்கறை எடுத்துக்கொள்ள வில்லை என்பதுதான் அது. உண்மைதான்.


சாய்பாபாவிற்கும், மகேஷ் யோகிக்கும் பின்னால் வந்த ஓஷோ இருவரையும் அலட்சியமாகத் தாண்டிச் சென்றார். ஓஷோவை ஆங்கிலம் பேசும் பல ஜீன்ஸ் சாமியார்கள் பின் தொடர்ந்தனர். இந்த சாமியார்கள் லிங்கம், விபூதி எல்லாம் எடுப்பதில்லை. பிரம்மச்சரியம் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மனமற்ற நிலையை அடைவதுதான் முக்தி. மனதைக் கொன்றுவிடுவது, அதிலிருந்து சிந்தனையை விலக்கி அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல் ஆக்கிக் கொள்வது என்றெல்லாம் முழங்கி இவர்கள் இந்திய ஆன்மி கத்தின் மையத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இந்த சாமியார்கள் மார்க்ஸையும், ஃப்ராய்டையும், ஐன்ஸ்டீனையும் அலட்சியமாக மேற்கோள் காட்டிப் பேசினர். இறுதியில் பதஞ் சலியோகம், தியானம் போன்றவற்றில்தான் உய்விருக்கிறது என்று கூறி பழமைவாதத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். முழுத்தீர்வு மனதைக் கொல்வதுதான் என்றாலும் தினமும் சர்க்கரை வியாதிக்கு மாத்திரை சாப்பிடுவது போல குறிப் பிட்ட நேரம் தியானம் செய்து அன்றைய பொழுதுக்கு புத்துணர்ச்சி அடைந்து கொள்ளலாம் என்றார்கள் இவர்கள்.


இதற்கு மத்தியதர வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவினரி டையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. கடவுளுக்கும் இதற்கும் தொடர்பில்லை, முற்போக்குவாதிகள் கூட முற் போக்குக்கு இடைஞ்சல் இல்லாமல் தியானத்தில் ஈடுபடலாம் என்றெல்லாம் இந்த சாமியார்களின் பக்தர்கள் பேசத் தொடங் கினர். பல பொதுவுடமைவாதிகளேகூட யோகா தியானம் என்றெல்லாம் இறங்கியது இன்னொரு வேடிக்கை.


யோகாசனப் பயிற்சி ஒரு தனித்துறையாக வளர்ந்தது. முத லில் வேதாத்திரி மகரிஷி போன்ற சாமியார்களின் ஆசிரமங் களில் யோகாசனங்கள் சொல்லித்தரப்பட்டன. ஆனால் இடுப்புவலி, மூட்டுவலி என்று பல பிரச்சினைகள் ஏற்பட்ட தால் யோகாசனங்களை கைகழுவி விட்டுவிட்டு தங்களுக்கு என்று வேறு எளிய உடற்பயிற்சிகளை உருவாக்கிக் கொண்ட னர். இந்தப்பயிற்சிகள் ஏரோபிக்சை ஒத்திருக்கிருக்கின்றன என்கிறார் பிரேமானந்தின் நெருங்கிய நண்பரும், பல ஆண்டுகள் இந்த ஆசிரமங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருமான தோழர் சூலூர் விஜயகுமார்.


சாமியார்கள் கைகழுவினாலும் பார்ப்பன பத்திரிகைகளும், மூலைக்கு மூலை உருவான யோகாசன ஆசிரியர்களும் யோகாசனங்களை மிக உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச் சென் றனர். மருத்துவர்களேகூட யோகாசனங்களைப் பரிந்துரைக் கும் முறை ஏற்பட்டது. பிரேமானந்த் போன்றவர்கள் லிங்கம் எடுக்கும் முரட்டு சாமியார்களோடு உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கையில் இந்த நவீனரக ஜீன்ஸ் சாமியார் களும், யோகா ஆசிரியர்களும் ஓசைபடாமல் உள்ளே நுழைந்து அவர்களின் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தனது இறுதிநாட்களில் பிரேமானந்த் ஒவ்வொரு நாளும் இந்த புதுவகை ஆன்மீகவாதிகளை எதிர்கொண்டார். அவர் புழங் கிய ஒவ்வொரு இடத்திலும் வேதாத்திரி ஆழ்நிலை தியான மையங்கள், ஜக்கி வாசுதேவ் தியான மையங்கள்... நிலைமை யின் தீவிரத்தை அவர் உணர்ந்துதான் இருக்கவேண்டும்.


இந்த யோகா, தியானங்கள் மீது பிரேமானந்த் கடும் விமர்ச னம் கொண்டிருந்தார். இறுதி ஆண்டுகளில் இந்த சாமியார் களுக்கு எதிராக நாம் முறையாக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் யார் மையத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தாமதம், நோயின் கொடுமை ஆகியவை அவரால் முழுமை யாக அந்தப் பணியில் இறங்க முடியாமல் போய்விட்டது.


யோகாசனம் ஒரு உடற்பயிற்சியே அல்ல என்றார் பிரேமா னந்த். உலகை வெறுத்த சாமியார்கள் அரை மயக்கநிலையில் தங்களை வைத்துக்கொள்வதற்குக் கண்டுபிடித்த முறைதான் யோகாசனங்கள். அவை ஆரோக்கியமான மனிதர்களுக்கு உகந்ததல்ல. கையை நீட்டி நீட்டி மடக்கினால் அது ஒரு உடற் பயிற்சி. கொழுப்பைக் குறைக்கும் தசைகளை வலுவாக்கும். ஆனால் மடக்கியே வைத்திருந்தால் அது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதுதான் யோகாசனம் என்றார் பிரேமானந்த். மகா வீரர் காலத்தில் சமணமுனிவர்கள் தங்கள் உடலை வருத்திக் கொள்ள பல்வேறு வினோதமான முறைகளில் உட்காரவும் படுக்கவும் செய்தனர். இவைதான் பின்பு யோகாசனங்களாக வளர்ச்சி பெற்றன என்கிறார் டி.டி.கோசாம்பி ( பண்டைய இந் தியா ). கோசாம்பி, யோகாசனங்கள் உடலுழைப்பில் ஈடுபடா தவர்களுக்கு நல்ல உடற்பயிற்சி என்ற எண்ணம் கொண்டிருந் தாலும் யோகாவின் தோற்றம் பற்றிய அவர் கருத்து பிரேமானந்தின் கருத்தையே உறுதிப்படுத்துகிறது. ஆதிகாலங்களில் யோகாசனம் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட யோகாசன நிலையிலேயே பலமணிநேரம் இருக்க வேண்டும். அதனால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்யும். இதனால் அரைத்தூக் கம் போன்ற ஒரு மந்தமான உணர்வு ஏற்படும். இதைத்தான் சாந்தி கிடைக்கிறது என்கிறார்கள் என்றார் பிரேமானந்த். தற் போதைய யோகா ஆசிரியர்கள் யோகா என்ற பெயரில் சொல்லித் தருவது யோகாவே அல்ல என்றாலும், பார்ப்பனீ யத்தை கொல்லைப்புற வழியில் திணிக்க இது பயன்படுகிறது என்ற எண்ணம் கொண்டிருந்தார் அவர். பள்ளிகளில் யோகா சனம் சொல்லித் தரப்படுவதற்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யவும் இறுதிநாட்களில் தயாரிப்புகள் செய்து கொண்டிருந்தார்.


தியானத்தைப் பொறுத்தவரை ஆசிரமங்களில் சொல்லித்தரப் படும் எல்லாப் பயிற்சிகளிலும் மூச்சைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. பிராணயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளும் வானளாவப் புகழப்படுகின்றன. ஆனால் உள்ளே இழுக்கப்பட்ட காற்றிலிருந்து நுரையீரல்கள் அற்ப நேரத்தில் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக் ஸைடை வெளிவிடுகின்றன. மூச்சை அடக்கினால் உள்ளே இருப்பது கார்பன் டை ஆக்சைடு. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவும் இயல்பாகவே குறைகிறது. இதன் காரணமாகவே ஆன்மீகவாதிகள் சொல்லும் சாந்தி சாத்திய மாவதோடு, இதனால் பல மோசமான பின்விளைவுகளும் ஏற்படும். புறநிலை எதார்த்தத்தின் மூலமே அமைதியின்மை ஏற்படுகிறது. இந்த தியானம், பிராணாயாமம் போன்றவை சற்றுநேரம் போதை போன்ற உணர்வை அளித்தாலும் அது நீடித்து நிற்காது என்றார் பிரேமானந்த்.


யோகா, தியானம் குறித்த கேள்விகளை முன்பும் பகுத்தறிவு வாதிகள் எதிர்கொண்டுதானிருந்தார்கள். கோவூர் தொடர்ச்சி யாக தியானம் செய்பவர்களுக்கு டெம்போரல் எபிலெப்ஸி (ஜிமீனீஜீஷீக்ஷீணீறீ ணிஜீறீமீஹ்) எனப்படும் வலிப்பு நோய்க்கான அறி குறிகள் தெரிகின்றன என்று எழுதுகிறார். தீ மிதிப்பது போன்ற உணர்வு, தலைக்குள் பல்லாயிர நட்சத்திரப் பொறிகள் தோன் றுதல் ஆகியவை ஆழ்நிலை தியானம் கைகூடுவதற்குரிய அறிகுறிகள் என்று தியானம் செய்கிறவர்கள் கூறுகின்றனர். இதையேதான் வலிப்பு நோய்க்கான அறிகுறி என்கிறார் கோவூர். ஆனால் விஞ்ஞான பைரவ தந்திரா, பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற பழம் சமஸ்கிருத நூல்களில் ஆழ்ந்த அறிவு, நேரடியாக யோக சாதகம் செய்த அனுபவம் போன்ற வை மற்றவர்களைவிட பிரேமானந்திற்கு அதிகம் இருந்தன. அவர் பேசியதை எல்லாம் எழுதியிருந்தாலே ஒரு மிக ஆரோக்கியமான விவாதம் தொடங்கியிருக்கும் நவீன ஆன் மீகத்திற்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரத்தை முன் னெடுக்க முழுக்க முழுக்கத் தகுதியானவராக இருந்தார் அவர். எனவேதான் அதை அவர் செய்யாமல் விட்டகுறை தூக்கலாகத் தெரிகிறது.


+++
பிரேமானந்த் மென்மையாகப் பேசுபவர். ஆனால் ஒரு நாளும் தன் கொள்கைகளில் ஒருவருக்கும் கருணையோ விதிவிலக்கோ காட்டியதில்லை.


கிருஷ்ணய்யர் மீது நமக்கெல்லாம் எவ்வளவு மரியாதை உண்டு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த அவரது துணைவியார் மரணம் அடைந்த பின்பு ஆன்மீகவாதியாக மாறினர். அதன் உச்சகட்டமாக டெல்லியில் நடந்த மந்திரவாதிகள் மாநாட் டுக்கு தலைமை தாங்கினார். மனைவியோடு எப்படியாவது பேசிவிடவேண்டும் என்ற தீராத விருப்பமே அவரை அப்படி உந்தித் தள்ளியது என்று கிருஷ்ணய்யர் வாழ்க்கையை எழுதிய மகபூப் பாட்ஷா கூறுகிறார். பிரேமானந்த் தனது அறிவியலா? அருஞ்செயலா? என்ற நூலில் மந்திரவாதிகள் மாநாட்டை நேரடியாகவே கிண்டல் செய்தார். கிருஷ்ணய்யர் அதில் கலந்து கொண்டதை எள்ளல் தொனியில் குறிப்பிட் டார். எந்தப் பசப்பும், மன்னிப்புக் கேட்கும் தோரணையும் இல்லாமல். பெரும்பாலும் முற்போக்காளர்கள் அனுதாபத்துட னும் அக்கறையுடனும் அணுகும் சூஃபி மார்க்கம், மூட நம்பிக்கைகள் மலிந்ததாக இருக்கிறது என்று பேச பிரேமானந்த் தயங்கியதே இல்லை.


எல்லாவற்றிற்கும் மேலாக ஹோமியோபதி அது ஒரு மருத்து வமே அல்ல என்ற உறுதியான கருத்து கொண்டிருந்தார் பிரேமானந்த். செறிவூட்டுதல் என்று ஹோமியோபதியில் கூறப்படும் முறை உண்மையில் நீர்த்துப் போகச் செய்வது தான். ஆய்வகங்களில் ஹோமியோபதி மருந்துகளில் அவர் கள் கூறும் வேதிப்பொருட்கள் இருப்பது ஒருநாளும் நிரூபிக்கப்படவில்லை என்றார் அவர். ஏகாதிபத் தியஎதிர்ப்பின் ஒரு பகுதி, லாபவெறி கொண்ட அலோபதி மருத்துவத்திற்கு மாற்று என்ற முறையில் ஹோமியோபதி மீது நமது தோழர்களுக்கு அன்பு உண்டு. கடைகளில் விற்கும் ஹோமியோபதி மருந்துகளைத் தயாரிப்பவர்கள் யார்? அதே பன்னாட்டு நிறுவனங்கள்தானே என்றார் பிரேமானந்த். இது குறித்து நிபுணர்கள் மட்டுமே ஆதாரப்பூர்வமாகப் பேசமுடி யும் என்பதால் இது பிரேமானந்தின் கருத்து என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த மூட நம்பிக்கை எதிர்ப்புப் போராட்டத்தில் விஞ்ஞானத்திற் கும், அஞ்ஞானத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பிரேமானந்த் எந்த சமரசமும் இன்றி தனது பாத்திரத்தை ஆற்றினார். நாடெங்கும் அவர் விதைத்தார். முடிவுவரை தொடர்ந்து நடக்க இருக்கும் இந்தப் போரில் அடுத்த தலைவனை காலம் அடையாளம் காட்டும்

Footer