October 12, 2007

கோவையிலிருப்பவர்களுக்கு கென்னடி தியேட்டர் தெரியாமலிருக்காது
ஆனால் எனக்கு தெரியாமலிருந்ததது ஆச்சரியமல்ல!
அதன் பின்புறத்தில் ஒரு ஆட்டோகேரேஜ்........
GK அதன் பெயர்
.......
அதன் உரிமையாளர்... உரிமையாளரென்றால் எப்பவுமே ஸ்பேனரும் கையுமாய் இருப்பவர் விஜி.....


ஒருமுறை நண்பர் சினிவாசனோடு அவரை சந்திக்க முடிந்தது
மனதுக்குள் எதையும் பூட்டி சாவியை தொலைக்காத கேரக்டர்
தொண்டையில் வடிகட்டியும் கிடையாது
வறுமையால் படிப்பை தொடரமுடியாத நிலையில் அப்பாவோடு தொழிலில் ஐக்கியமாகியிருக்கிறார்
வயது 33
காலில் எப்போதும்
எம்.எப் ஆர் டயர் இருக்கும் பரபரா.......

நீங்க என்ன வேலை செய்ரீங்க ? இது அவர்

ஒரு சமூக மேம்பாட்டு திட்டதில் பணியாற்றுகிறேன்.

அப்படீன்னா?

குழந்தை தொழிலாளர் குறைப்பு திட்டம் பழங்குடிகள் மேம்பாடு

சிரித்தார்

தினறினேன்

இல்லை இது எனக்கு வேலை!
உங்களுக்கு ஆட்டோமொபைல் மாதிரி.....

ஓகோ...*

விலாவாரியாக கேட்டார்

தொலைபேசியில் யாரையோ அழைத்தார்

எந்த கோவிலுக்கோ போகவேண்டிய தானத்தை நிறுத்தி
400 குழந்தைகள் இருக்காங்க
ஒருநாள் நல்லா சாப்பிடட்டும்
............................
தெய்வ குத்தமா?

இப்படி ஒரு தெய்வமிருக்கிறதுதான் குத்தம்........
எதிர்முனையை துண்டித்தார்

முகவரி கேட்டார்
கொடுத்தேன்

அடுத்த நாள்

மிக நல்ல பேக்கில் 400 பிரியாணிகள் வந்திறங்கியது அதிர்சியாயிருந்தது

அன்று

குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் உண்டிராத

வித்தியாசமான உணவை புசித்தனர்

திடீரென்று ஒருநாள் ஒருவரை அழைத்து வந்தார்
இவனுக்கு இன்று பிறந்த நாள்
இன்னைக்கு குழந்தைகளுக்கான சாப்பாடு இவனதுசெலவு

ஒருநாள் யாரோ ஒரு ஜைனரைப்பிடித்து 200 ஆரஞ்சுப்பழங்களை அனுப்பி வைத்தார்
இப்படி வருடத்திற்க்கு கிட்டதட்ட 25000 ரூபாயை திருப்பிவிட்டு வருகிறார்

8 மதங்களுக்கு முன்அவருடைய பிறந்த நாளுக்கு அழைத்தார்

அங்கே எல்லாருக்கும் முன்னால் அவருடைய ஜாதகத்தை எரித்து
அதிர்ச்சியளித்தார்

ஒரு நாள் கேட்டேன்

கடவுள் நம்பிக்கை இருக்கா?

இருந்தது..இப்ப இல்லை

தி.க வா?

இல்லை !

கம்யூனிஸ்டா?

இல்லை !

பெரியாரை படிச்சிருகீங்களா?

இல்லை!

பின்னே...

சாமிகள் ஒன்றும் செய்யவில்லை

உங்க கிட்ட ஒருத்தர் ஒரு உதவி கேட்கிறார்
செய்யவில்லை
மீண்டும் ஒரு நாள் ஒரு உதவி கேட்கிறார்கள்
செய்யவில்லை
ஒன்றுமே செய்யாத உங்களை ஏன் நம்பனும் அதுமாதிரிதான்

கல்யாணம் எப்போ விஜி?

பொண்ணுகிடைக்க மாட்டீங்குது!

ஏன்?

அம்மா அப்பா பாக்கறதெல்லாம்
சாதிக்குள்ளயே பாக்குறாங்க

அப்புறம்?

எனக்கு அது புடிக்கிலீங்க..
என்ன வெங்காய சாதிங்க?
சும்மா டென்சன் பண்ரானுக.....

இவுனுக எது மோசம்னு சொல்லறாங்களோ
அந்த சாதியில தான் பண்ணணும்

அவர்
விருப்பம் போலவே ஒரு தோழி கிடைத்திருக்கிறாள்
என்று கேள்விப்பட்டேன்

இப்படி ஏராளமான கட்டுகளை
உடைத்துப்போடுகிறார்

சும்மா தத்துவ தவுடுகளுக்கு மத்தியில்
மிக எதார்த்தமாக வாழ்வை எதிர்கொள்ளும்
விஜியை இரண்டு கரமெடுத்து ஏனோ மனசு
தொழுகிறது

அந்த உறவு இன்னும் இறுக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment

Footer